
நல்லூர் திருவிழாவுக்காக விரைவாக வந்த ரயில்; யாழில் அமைச்சர் பந்துல தெரிவிப்பு
நல்லூர் முருகன் ஆலய பெருந்திருவிழா ஆரம்பிக்கப்பட உள்ளதால் யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவையை விரைவுப்படுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியதற்கு இணங்க திருத்த வேலைகளை விரைவுப்படுத்தினோம் என போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை, ஐந்து மாதங்களின் பின்னர் யாழ்ப்பாணத்துக்கு வெள்ளோட்டமாக புகையிரதத்தில் வருகை தந்த அமைச்சர் பந்துல குணவர்த்தன யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்குமான புகையிரத சேவை நிறுத்தப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகும் நிலையில் அதனை நல்லூர் முருகன் ஆலய பெருந்திருவிழாவுக்கு முன்னதாக ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.
ஓமந்தை முதல் மாகோ வரையான ரயில் பாதை மிகவும் சேதமடைந்த காரணத்தினால் புகையிரத சேவைகளை நிறுத்தி திருத்தப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டோம்.
எனினும் அமைச்சர் டக்ளாஸ் தேவானந்தா நல்லூர் முருகன் ஆலயத்திற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவதுடன் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான மக்கள் ஆலய திருவிழாவுக்காக வருகை தருவார்கள் எனக் கூறினார்.
அவரின் வேண்டுகோளுக்கு இணங்க புகையிரதப் பாதை திருத்தப் பணிகளை விரைவாக செயல்படுதியதால் யாழ்ப்பாணத்தை வந்தடையக் கூடியதாக இருந்தது.
நாம் புகையிரதப் பாதைகளை திருத்த முற்பட்டபோது நாட்டில் ஏற்பட்ட கொவிட் தாக்கம் அதனோடு நாட்டிலே ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை காரணமாக எமது திட்டங்களை முன் கொண்டு செல்வதில் பிரச்சனை ஏற்பட்டது.இருந்தாலும் வடக்கு மக்களுக்கு புகையிரத சேவை விரைவாக கிடைத்தமை மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கான குளிரூட்டி புகையிரத சேவையை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் ஒரு வழிக் கட்டணமாக 4 ஆயிரம் ரூபா அறவிடலாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கல்கிசையில் இரவு 10 மணிக்கு புறப்படும் குளிரூட்டி புகையிரதம் காலை 6 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.
அதேபோல் யாழ்ப்பாணத்தில் இரவு 10 மணிக்கு புறப்படும் குளிரூட்டிப் புகையிரதம் கொழும்பு புறக்கோட்டையை காலை 6 மணிக்கு வந்தடையும் என்றார்.
இந்த வரவேற்கும் நிகழ்வில் கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்,இந்தியத் துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெபாஸ்கரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

