
‘வீட்டு சின்னம்”மூலம் பாராளுமன்றம் சென்ற அனைவரும் தமிழரசுக் கட்சி எம்.பி.க்கள்தான்
பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டுப் பாராளுமன்றம் சென்றவர்கள் பதவிக்காலம் முடியும் வரை தமிழரசுக் கட்சிதான் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை இடம் பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
இந்த ஊடகவியலாளர் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் ஆணையகத்திடம் தமிழ் தேசிய கூட்டமைப்பை தமக்கு வழங்குமாறு எழுத்து மூலமாக கடிதம் ஒன்றை வழங்கி இருந்தது.ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பை தேர்தல் ஆணையம் வழங்க முடியாது என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருக்கு எழுத்து மூலமாக பதிலை வழங்கிய நிலையில் அது தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன என்ன கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் பங்காளிக் கட்சிகள் அனைவரும் போட்டியிட்டோம்.தற்போது சிலர் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கிக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையகத்திடம் கோரியிருக்கிறார்கள்.
ஆகவே வீட்டு சின்னம் தமிழரசு கட்சியின் சின்னம்.அந்த சின்னத்துக்கு விழுந்த வாக்குகளினால் பாராளுமன்றம் சென்றவர்கள் பதவிக்கால முடியும் வரை தமிழரசு கட்சியை சார்ந்தவர்கள் தான் என்றார்.
தேர்தல் ஒன்று இடம்பெறுமானால் பிரிந்தவர்கள் எல்லோரும் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தேர்தலில் வாக்கு கேட்கும் யோசனை இருக்கிறதா என இன்னொரு கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த மாவை சேனாதிராஜா, நாங்கள் எப்போதும் ஒற்றுமையை வலியுறுத்துபவர்கள். பிரிந்து நின்று எதையும் சாதிக்க முடியாது.எல்லோரும் ஒற்றுமையாக வருவார்களானால் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.

