
இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டாரா? அவருக்கு என்ன நடந்தது என எனக்குத் தெரியாது
இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டாரா அல்லது அவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் எனக்கு எதுவுமே தெரியாது. அப்போது நான் பிரதி பாதுகாப்பு அமச்சராக இருந்தபோதும் எனக்கு இது தொடர்பில் எதுவுமே தெரிவிக்கப்படவில்லையென முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரி பால சிறிசேன தெரிவித்தார்.
யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஊடகவியலாளர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுப்பிய ”யுத்த இறுதிக் கால கட்டத்தின் போது நீங்கள் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றி இருந்தீர்கள் எனவே பிரபாகரன் உள்ளாரா/இல்லையா என்பது தொடர்பாக உங்களுக்கு தெரிந்திருக்கும். அது தொடர்பாக உங்கள் கருத்து என்ன என்ற
கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
இறுதி யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நான் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராகவே இருந்தேன்.அதுவும் இரண்டு வாரங்கள் மாத்திரமே பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன்.அப்போது பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்பது நிலைமைகளை கையாண்ட தலைமைகளுக்கு மாத்திரமே தெரியும்.
இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டாரா அல்லது அவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் எனக்கு எதுவுமே தெரியாது.அவை தொடர்பாக எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை ஆலோசிக்கபடவும் இல்லை என்றார்.
அதுமட்டுமன்றி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மரணம் தொடர்பான மரபணு பரிசோதனை தொடர்பாகவும் எனக்கு எதுவும் தெரியாது என்றார்.
இதன்போது குறுக்கீடு செய்த ஊடகவியலாளர் ஒருவர், நீங்கள் ஜனாதிபதியாக இருந்த போது இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் இறுதி யுத்தத்தை வெற்றி கொண்ட பங்கு என்னையே சாருமென கூறினீர்கள் அவ்வாறு கூறிய உங்களுக்கு பிரபாகரனின் உயிரிழப்பு தொடர்பில் தெரியாதா? என கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த மைத்திரிபால சிறிசேன, நான் பதில் பாதுகாப்பு அமைச்சராக சிறிது நாட்களே கடமை ஆற்றினேன்.இதனால் அவரது இறப்பு தொடர்பில் தனக்குத் தெரியாது என்றார்.
இந்த ஊடகச் சந்திப்பில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் எம்.பி.யுமான அங்கஜன் இராமநாதன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாரதி துஷ்மந்த மித்ரபால, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொலனறுவை மேற்கு அமைப்பாளர் தஹாம் சிறிசேன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

