
மனித எச்சங்களை அகழ்வும் பணிகள் அடுத்த மாதம் முதல் ஆரம்பம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களை அகழ்வும் பணிகள் அடுத்த மாதம் 6ஆம் திகதி முன்னெடுக்க முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனித எச்சங்களை அழிவடையாமல் பாதுகாக்க, பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டிய போது நிலத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து கொக்குளாய் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்,
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போதே முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாக அறியமுடிகின்றது.
இதேவேளை, குறித்த எச்சங்கள் பெண் போராளிகளின் தடையங்கள் எனவும் பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடைகள் மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

