
மக்களின் கவனத்தை திசை திருப்பி ஆபத்தான முடிவை அரசு எடுக்கின்றது
பொருளாதார துறையில் அரசாங்கம் எடுக்கும் ஆபத்தான தீர்மானமாகவே தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானம் அமையும் என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், விடுமுறை நாட்களில் மக்களின் கவனம் வேறு திசையில் இருக்கும் போது அதனை நிறைவேற்றுவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சுதந்திர மக்கள் சபையினால் கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய வரலாறு உருவாகுவதையே பார்க்கின்றோம். ஞாயிற்றுக்கிழமையில் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், இதுவரையில் அவ்வாறு நடந்ததில்லை. இதனுடன் நிறுத்ததாது இன்னும் பல விடயங்கள் நடக்கவுள்ளன. 5 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை நாட்களாக கருதப்படவுள்ளன. இந்த காலப்பகுதியில் வங்கி கட்டமைப்புகள் முழுமையாக மூடப்படும். மிகவும் கசப்பான மருந்தை நாட்டுக்கு ஊட்டுவதற்காக திட்டமிடப்படுகின்றது. வங்கிகள், பங்குச் சந்தைகளை மூடி அதனை செய்யப் போகின்றனர்.
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான யோசனையை ஜுலை 2ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஏன் இவ்வாறு வங்கி கட்டமைப்புகளை முடக்கி செய்ய வேண்டும். நாட்டின் அவதானம் இல்லாத நேரத்திலேயே இவ்வாறான விடயத்தை செய்ய முயன்றுள்ளனர். பொருளாதார துறையில் அரசாங்கம் எடுத்துள்ள ஆபத்தான தீர்மானம் இதுவே ஆகும். இதனால் கிடைக்கும் பெறுவேறு மிகவும் பாரதூரமானது. மக்களின் கண்களில் மண்ணைத் தூவி இதனை செய்ய முயற்சித்துள்ளனர். இதற்கு நாங்கள் முழுமையாக எதிர்ப்பை வெளியிடுவதுடன், இதனை எதிர்த்தே வாக்களிப்போம். இத்துடன் நிற்காது நாட்டில் எல்லா இடங்களுக்கும் சென்று மக்களை தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
சர்வதேச நாணய நிதியத்தின்(ஐ.எம்.எப்.)யோசனையில்கூட இது இல்லாத ஒன்றே. இலங்கை அரசாங்கமே இதனை செய்ய முயற்சிக்கின்றது. அரசாங்கமே தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தீர்மானம் எடுத்து சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளது.

