பிரபாகரன் உயிரிழந்தாரா?; இலங்கை அரசு நிரூபிக்கவில்லை

பிரபாகரன் உயிரிழந்தாரா?; இலங்கை அரசு நிரூபிக்கவில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்தார் என்பதனை இலங்கை அரசு நிரூபிக்கவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளைத்தலைவரும், ஜனாதிபதி சட்டதரணியுமான கே.வி தவராசா தெரிவித்தார்

நேற்று வெள்ளிக்கிழமை யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய மரபணு தொடர்பான அறிக்கையினை வழங்க முடியாது என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதனை இந்த அரசாங்கம் நிரூபிக்கவில்லை. இந்த அரசினால் வே.பிரபாகரன் இறந்ததற்கான மரணச் சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை.

நீதிமன்றத்தில் நடந்த கதிர்காமர் கொலைவழக்கிலே பிரபாகரனை எதிரியாக பெயர் குறிப்பிட்டு இருந்தார்கள். அந்த வழக்கிலே நான் ஆஜராகி இருந்தேன் .

பிரபாகரன் உயிரிழந்தமை தொடர்பில் ஒரு அதிகாரியினுடைய அறிக்கையைத்தான் சமர்ப்பித்திருந்தார்கள். நான் அதற்கு ஆட்சபனை தெரிவித்து இருந்தேன். அதிகாரியினுடைய அறிக்கையினை கொண்டு மரணத்தினை உறுதிப்படுத்த முடியாது. ஒருவர் இறந்தால் அது மரணசான்றிதழ் மூலமே உறுதிப்படுத்த முடியும் என நான் வாதிட்டேன்.

மரண சான்றிதழ் இல்லாவிட்டால் ஒருவர் இறந்து விட்டார் என்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது என குறிப்பிட்டு இருந்தேன். இருந்த போதும் தற்போது வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மரண சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்த அடிப்படையில் பிரபாகரனின் மரபணு அறிக்கை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகத்தான் நான் பார்க்கின்றேன். தேசிய பாதுகாப்பிற்கும் மரபணு அறிக்கைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

தொடர்ச்சியாக இந்த அரசாங்கம் காலத்தை கடத்துவதற்காக இவ்வாறான பொருத்தமற்ற தகவல்களை வெளிப்படுத்துகின்றது என்பதே உண்மை என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )