
விமல் வீரவன்சவை கைது செய்ய பிடியாணை
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்சவுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமல் வீரவன்ச எம்.பி.மற்றும் 6 பேருக்கு எதிராக கறுவாத் தோட்டம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு நேற்று திங்கட்கிழமை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இளவரசர் ஸெய்ட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது கொழும்பு, தும்முல்லையில் உள்ள ஐ.நா வளாகத்தைச் சுற்றியுள்ள வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
விமல் வீரவன்ச, வீரகுமார திஸாநாயக்க, பியசிறி திஸாநாயக்க, மொஹமட் முஸம்மில், ஜயந்த சமரவீர மற்றும் ரொஜர் செனவிரத்ன உள்ளிட்ட 7 பேர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

