
அரசின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் முறையீடு
அரசாங்கம் முன்னெடுக்கும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் தொடர்பில் ஆராயுமாறு மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்தவுள்ளதாக சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் எம்.பி.யுமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது.இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கை புதன்கிழமை பேரவையில் வாசிக்கப்படும்.கடந்த காலங்களில் இடம்பெற்ற கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட பல விமர்சனங்கள் இன்றும் கறுப்பு புள்ளியாகவே உள்ளது.
வங்குரோத்து நிலையில் இருந்துக் கொண்டு ஜனநாயகத்துக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சர்வதேசத்திடம் வலியுறுத்தவுள்ளோம்.நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கி தன்னிச்சையான முறையில் செயற்பட அரசாங்கம் சட்டங்களை உருவாக்க முயற்சிக்கிறது என்றார்.

