
கிளிநொச்சி நகரில் 40 வீத காணிகள் படையினர் வசம்; நகர அபிவிருத்திக்கு பாரிய தடை என்கிறார் ஸ்ரீதரன்
கிளிநொச்சி நகரிலுள்ள நாற்பது வீதமான காணிகள் தொடர்ந்தும் படையினர் வசம் உள்ள நிலையில் நகரத்தின் அபிவிருத்தி குறித்துப் பேசுவதில் எந்தவிதமான பயனும் கிடையாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான சிவஞானம்ஸ்ரீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மகாவித்தியாலய விளையாட்டு மைதானம் அமைந்துள்ள காணிக்குரிய பாதை இதுவரை படையினரால் விடுவிக்கப்படாத நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
கிளிநொச்சி நகரத்தில் முக்கிய இடங்களிலுள்ள காணிகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் இன்றும் படையினரின் கட்டுப்பாட்டில் தொடர்ந்தும் இருந்து வருகின்றன.இதனால் நகரத்தின் அபிவிருத்தியை அல்லது மாவட்டத்தின் அபிவிருத்தியைத் தீர்மானிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.கிளிநொச்சி நகரத்திற்கான பொதுநூலகத்தைக் கூட இதுவரை நிர்மாணிக்க முடியாத நிலையில் தற்போது நூலகத்திற்கு சொந்தமான காணியில் இரண்டு பரப்புக் காணியை மட்டுமே படையினர் விடுவித்துள்ளனர்.ஏனைய நான்கு பரப்புக் காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
இதனைத் தவிர, மக்களின் போக்குவரத்திற்கு இலகுவாகக் காணப்பட்ட குமாரசூரியர் வீதி யோகர் சுவாமி வீதி என்பன நீண்டகாலமாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த வீதிகள் என்பதுடன் குறித்த வீதிகளின் உருவாக்கத்திற்கு முன்னரான பழைய வீதிகளாகவே இந்த வீதிகள் அமைந்துள்ளன.
ஆனால் குறித்த இரண்டு வீதிகளையும் இராணுவத்தினர் முழுமையாக மூடி இராணுவ முகாம் அமைத்துள்ளனர்.கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு மாணவர்கள் சென்றுவருவதற்கு குமாரசூரியர் வீதியைப் பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளது.பாடசாலைக்கு முன்பாகவுள்ள குமாரசூரியர் வீதியை படையினர் முழுமையாக மூடியுள்ள நிலையில் மாணவர்கள் ஏ- 9 வீதி வழியாக விளையாட்டு மைதானத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.இந்த நிலையில் குறித்த வீதியை மக்கள் பாவனைக்கு கையளிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும் அந்த வீதிகளைக் கைவிடுவதற்கு படையினர் தயாராக இல்லை.
இதேபோல் கிளிநொச்சி டிப்போ சந்திக்கு முன்பாக நினைவுச் சின்னமாக படையினர் பயன்படுத்தி வரும் சந்திரன் பூங்காவிற்குரிய காணி மற்றும் அதற்குப் பின்பாகவுள்ள காணி என்பனவும் இன்றுவரை படையினரால் விடுவிக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் குறித்த காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இராணுவப் பிரசன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பும் கிளிநொச்சி நகர அபிவிருத்திக்கு இடையூறாகவே அமைந்துள்ளன.எனவே இவ்வாறான நிலங்களை விடுவிப்பதன் மூலமே மாவட்டத்தின் அபிவிருத்தியைத் தீர்மானிக்க முடியும்.
கிளிநொச்சி நகரத்தை அண்மித்த பகுதிகளில் நாற்பது வீதமான நிலங்களை படையினர் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டிற்குள் ஆக்கிரமித்து வைத்திருப்பது மாவட்டத்தின் அபிவிருத்தி அல்லது நகரத்தின் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு பாரிய தடையாகவுள்ளது என்றார்.

