350 கி.மீற்றரை 32 மணி நேரங்களில் கடந்து தமிழ் இரட்டையர் படைத்த சாதனை

350 கி.மீற்றரை 32 மணி நேரங்களில் கடந்து தமிழ் இரட்டையர் படைத்த சாதனை

யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரை 566 கிலோ மீற்றர் தூரத்தை மூன்று நாட்களில் நடந்து சென்று, சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பொகவந்தலாவையை சேர்ந்த இரட்டையர், 350 கிலோ மீற்றரை 32 மணிநேரங்களில் கடந்து வந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில், சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த இரட்டையர்கள் தங்களது சாதனை நடைப்பயணத்தை புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பித்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று வியாழக்கிழமை கொழும்பு காலி முகத்திடலை அடைந்தனர்.

இந்நிலையில், அவர்கள் இதுவரை 350 கிலோ மீற்றரை 32 மணிநேரங்களில் கடந்து வந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில், சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த சாதனைக்கான சான்றிதழ்களும் இரட்டையருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரட்டையர் புதன்கிழமை அதிகாலை யாழ்ப்பாணத்தில் தங்களது நடைபயணத்தை ஆரம்பிக்கவிருந்த வேளையில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவரால் தகாத முறையில் நடத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், பலர் இவ்விளம் இரட்டையருக்கு ஆதரவும், இவர்களது சாதனை முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்திய பொலிஸாருக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

பொகவந்தலாவை, கொட்டியாக்கலை பகுதியை சேர்ந்த இரட்டையரான ஆர்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் ஆர்.ஏ. தயாபரன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரையான 566 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து சென்று, உலக சாதனை படைப்பதற்காக புதன்கிழமை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளத்துக்கு சென்று, அங்கிருந்து நேற்று கொழும்பை அடைந்த இவர்கள், காலி நோக்கிய தங்களது நடைபயணத்தை தொடர்ந்து, இன்று 16ஆம் திகதி காலியில் தங்களது பயணத்தை நிறைவு செய்யவுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )