
தேர்தலை நடத்தாது விட அரசு முயற்சியா?; சந்தேகம் எழுப்பும் போராசிரியர் பீரிஸ்
தேர்தலை நடத்தாது இருப்பதற்கு முயற்சிக்கப்படுமாக இருந்தால் இது சட்டவிரோத அரசாங்கமாகிவிடும் என்பதுடன், சர்வதேச உதவிகளை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என்று அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியில் சுயாதீனமாக இயங்கும் சுதந்திர மக்கள் சபையை சேர்ந்த முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் போராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நுவரெலியாவில் நடந்த சட்டத்தரணிகள் மாநாட்டில், ஜனாதிபதி புதுமையான கருத்தொன்றை தெரிவித்துள்ளார். ஜனநாயக தலைவர்கள் எவரும் இதுவரையில் கூறாத ஒன்றையே அவர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு அரசியல் தொடர்பிலோ, தேர்தல் தொடர்பிலோ எண்ணம் இல்லை என்று கூறுகின்றார். ஒருவருக்கு தேவையானவாறு தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியுமாக இருந்தால் தெளிவாக அது சர்வாதிகார ஆட்சியாகவே இருக்கும்.
பொருளாதார பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும், விழுந்துள்ள குழியில் இருந்து நாட்டை மீட்க வேண்டும் என்றும், இதுவே பிரதான சவால் என்றும் ஜனாதிபதி கூறுகின்றார்.
அப்படியென்றால் மக்கள் அனுமதிக்கும் கொள்கைக்கு அமையவே அதனை செய்ய வேண்டும். ஒருவரின் தீர்மானத்தால் செய்ய முடியாது. மக்களின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக தேர்தலை நடத்த வேண்டும்.
இவ்வாறான நிலைமையில் தேர்தல் அவசியமில்லை என்று கூறுபவர்கள், தாம் தோல்வியடைவோம் என்பதனாலேயே கூறுகின்றனர். இவ்வாறு நடந்துகொண்டால் இது சட்டவிரோத அரசாங்கமாகிவிடும். எவரும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கமாட்டார்கள். ஜீ.எஸ்.பி பிளஸ் உதவியையும் பெற முடியாது போகும். விரும்பியோ, விரும்பாவிட்டலோ தேர்தலை நடத்தியே ஆக வேண்டும். தேர்தலை நடத்தாதிருப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றார்.

