
ஊடகங்களை நசுக்க திட்டம்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
ஜனநாயக விரோத செயற்பாடுகளை அமுல்படுத்தி ஜனநாயகத்தை அழிக்கும் செயற்திட்டத்தின் மற்றுமொரு திட்டத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளதாகவும்,இதன் பிரகாரம் ஒலிபரப்பு அதிகார சபை சட்டத்தின் மூலம் ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை ஸ்தாபித்து நாட்டின் ஊடகங்களை நசுக்கி ஜனநாயகத்தை சூறையாடும் வகையில் புதிய சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டு வரவுள்ளதாகவும், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டதும் 6 மாதங்களுக்கு மட்டுமே தொலைக்காட்சி நிறுவன உரிமம் செல்லுபடியாகும் எனவும்,அதன் பின்னர், தொலைக்காட்சி அலைவரிசைகள் வருடாந்தம் உரிமம் பெறும் நடவடிக்கைக்கு உத்தரவிடப்படவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற, எதிர்க்கட்சியின் சர்வ கட்சி ஒன்றியத்தின் வாராந்த செயற்குழுக் கூட்டத்தில், ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
இந்த உரிமம் வழங்குவதில், சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனம் அரசுக்கு ஆதரவானதா இல்லையா என்பது குறித்து ஆராயப்படும் எனவும்,இதன் அடிப்படையில் உரிமக் கட்டுப்பாடுகளை விதித்து ஊடக அடக்குமுறையின் புதிய அத்தியாயத்தை இந்நாட்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,இதன் பிரதிபலனாக,இந்த சட்ட வரைவை அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும்,இதன் மூலம் ஊடகங்கள் மீதான பாரிய அடக்குமுறை முன்னெடுக்கப்பட்டு ஜனநாயகம் மீறப்படும் எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட செய்திகளை மட்டுமே ஒளிபரப்பும் ஊடக அலைவரிசைகளை உருவாக்கும் செயற்பாடுகளே இதன் கீழ் இடம் பெறும் எனவும்,நிறைவேற்று அதிகாரம்,சட்டமன்றம், நீதித்துறைக்குக்கு அடுத்ததாக நான்காவது அரசாங்கமாக கருதப்படும் சுதந்திர சுயாதீன ஊடகங்கள் இதன் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் வரைபடத்தை திருத்தியமைத்து நாட்டில் உள்ள 220 இலட்சம் பேரையும் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தும் சட்ட மூலத்தை கொண்டு வர முயற்சி செய்து நாட்டு மக்களின் ஜனநாயகத்தை அப்பட்டமாக மீறி வரும் வேளையில்,ஊடக நிறுவனங்களையும் அடக்குமுறைக்குட்படுத்தத் தயார் என்றாலும், எதிர்க்கட்சியாக ஒன்றிணைந்து இந்த செயல்முறையை தோற்கடிப்பதாகவும், நீதிமன்றத்தின் உதவியை நாடி எப்படியாவது இந்தச் செயலைத் தோற்கடிப்பதாகவும்,அதற்காக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் எழுப்பவுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஊடக நிறுவனங்கள் உண்மைத் தன்மை வாய்ந்ததும், துல்லியமான செய்திகளை அறிக்கையிடுமாறும், உங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை எதிர்க்கட்சி ஏற்பதாகவும்,எனவே அச்சமின்றி உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்க ஊடக நிறுவனங்கள் முன்வர வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

