நாடு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்தது போல் மீண்டும்; பழைய நிலைக்கு செல்ல  அனுமதிக்க மாட்டோம்  

நாடு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்தது போல் மீண்டும்; பழைய நிலைக்கு செல்ல  அனுமதிக்க மாட்டோம்  

கடந்த  ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,பாரம்பரிய அரசியலில் ஈடுபடும் சில குழுக்கள் பொருளாதார மறுமலர்ச்சியைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பொருளாதார மறுசீரமைப்புக் குறித்து மக்களிடம் தவறான அச்சத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. எப்போதும் கூறும் “நாட்டை விற்கப் போகின்றார்கள்” என்ற கோஷத்துடன் தொடர்ந்தும் மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன என்றும் குற்றம் சாட்டினார்.

 பொருளாதார சீர்திருத்தங்களின் மூலம் கிடைக்கும் பிரதிபலன்கள் என்ன? உங்களின் வாழ்க்கைச் சுமை குறையும். வாழ்க்கைத் தரம் உயரும். அது தவறா? அது நாட்டை விற்பதாக அமையுமா?மிகச் சிறிய அளவில் இருந்து வலுவான பாரிய வளர்ச்சி வணிகங்களை ஏற்படுத்த புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. அது தவறா? இது நாட்டை விற்பதாக அமையுமா? நாட்டின் ஏழ்மையான மற்றும் ஆதரவற்ற பிரிவினரைப் பாதுகாப்பதன் மூலம், அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிவாரணம் மற்றும் வசதிகள் வழங்கப்படுகின்றன. இது தவறா? இது நாட்டை விற்பதாக அமையுமா? அரச நிறுவனங்களால் ஏற்படும் கோடிக்கணக்கான ரூபா நட்டத்தை ஈடுகட்ட மக்கள் மீது சுமையை ஏற்றும் மரபு முடிவுக்கு வருகிறது. இது தவறா? இது நாட்டை விற்பதாக அமையுமா?வெளிப்படையான முறையில் பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்புடன் செயற்படுவதற்கான ஒரு நடைமுறை உருவாக்கப்படுகின்றது. இது தவறா? இது நாட்டை விற்பதாக அமையுமா? உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறி வருகிறது. இது தவறா? இது நாட்டை விற்பதாக அமையுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு நாடு மக்களுக்கு ஆற்றிய  விசேட உரையிலேயே இதனைத் தெரிவித்தார். 

அவர் ஆற்றிய  உரையில்  முக்கியமாக கூறியுள்ளதாவது.

நெருக்கடியான பொருளாதாரத்தால் பல இன்னல்களை சந்தித்து வந்த நாம் தற்போது மெதுமெதுவாக சாதகமான நிலையை அடைந்து வருகிறோம். நலிவடைந்து, வீழ்ச்சியடைந்த நமது பொருளாதாரம், ஓரளவுக்கு ஸ்திரமாகி வருகிறது.

கடந்த காலத்தில் நாம் கையாண்ட சரியான நடைமுறைகளினால் இந்த நிலையை எங்களால் அடைய முடிந்தது.அதே போன்று  நாம் அனைவரும் ஒன்றிணைந்து சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டோம்.  அந்தச் சவால்களை எதிர்கொள்ளும்போது பல்வேறு சிரமங்களை சந்தித்தோம்.

தாய் நாட்டிற்காக இந்தக் கஷ்டங்களைத் தாங்கிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழியில் இன்னும் சில காலம் தொடர்ந்து செல்வதன் மூலம் கஷ்டங்களையும் துன்பங்களையும் குறைத்து, சிறந்தவொரு பொருளாதாரத்தை  எமக்கு ஏற்படுத்த முடியும். இலங்கை இப்போது  முன்னேற்றகரமான மற்றும் வளமான பயணத்தை மேற்கொள்ள தயாராகியுள்ளது.

இங்கு நாம் எடுக்கும் முடிவுகள் கடினமாகவும் வேதனையாகவும் இருக்கும். பிரபலமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சரியான கொள்கைகளின்படி இந்த கடினமான பாதையில் நாம் தொடர்ந்தால் மட்டுமே நம் நாட்டை மீண்டும் உயர்த்த முடியும். இந்தப் பாதையில் நாம் தொடர்ந்தால்தான் எதிர்கால சந்ததியினர் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய நாட்டை உருவாக்க முடியும்.

பாரம்பரிய அரசியலில் ஈடுபடும் சில குழுக்கள் பொருளாதார மறுமலர்ச்சியைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பொருளாதார மறுசீரமைப்புக் குறித்து மக்களிடம் தவறான அச்சத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. எப்போதும் கூறும் “நாட்டை விற்கப் போகின்றார்கள்” என்ற கோஷத்துடன் தொடர்ந்தும் மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் முன்வைக்கும் கோஷம் இதுதான். ஐம்பதுகளிலும் கூட நாடு விற்கப்படுகிறது என்று சொல்லி மக்களை ஏமாற்றினார்கள். அறுபதுகளிலும் நாட்டை விற்பதாகச் சொல்லி மக்களைத் தவறாக வழிநடத்தினார்கள். எழுபதுகளிலும் நாடு விற்கப்படுகிறது என்று மக்கள் மத்தியில் ஒரு அசாத்திய பயத்தை உருவாக்கினார்கள். எண்பதுகளில் கூட நாடு விற்கப்படுகிறது என்று சொல்லி மக்களை அச்சத்தில் ஆழ்த்தினர். அன்று முதல் இன்று வரை இந்தக் குழுக்கள், நாட்டை விற்கப் போகின்றார்கள் என்ற கோசத்தை முன்வைத்து பொருளாதார சீர்திருத்தங்களை சீர்குலைக்க முயன்று வருகின்றன.

இனி, இது போன்ற கோஷங்களுக்கு நீங்கள் ஏமாற மாட்டீர்கள் என்று எங்களுக்கு தெரியும். நாட்டை முன்னேற்ற நாம் அனைவரும் கடுமையாக உழைத்து, நம்மை அர்ப்பணிக்க வேண்டியுள்ளது. 2048 ஆம் ஆண்டுக்குள் உலகில் வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்ற நமது இலக்கை அடைய வேண்டும். நவீன உலகத்துக்கும், நவீன தொழில்நுட்பத்துக்கும் ஏற்றவாறு நமது பொருளாதாரத்தை வடிவமைக்காவிட்டால், பின்னோக்கிச் செல்ல வேண்டி ஏற்படும். இத்தகைய விலகலின் விளைவு, நாடு பொருளாதார காலனித்துவமாக மாறுவதுதான்.

நாம் முன்னோக்கிச் செல்வோம். போட்டி நிறைந்த உலகை எதிர்கொள்ளும் வகையில் நமது பொருளாதாரத்தை உருவாக்குவோம். நாட்டுக்குத் தேவையான பொருளாதார மறுசீரமைப்புகளை முறையாக நிறைவேற்றுவோம்.தவறான கொள்கைகள், பலவீனமான நிகழ்ச்சிகள், தோல்வியடைந்த வேலைத்திட்டங்கள் ஆகியவற்றை ஒரு ஒழுங்கான பாதையில் முன்னெடுப்பதையே பொருளாதார மறுசீரமைப்புகள் மூலம் நாம் மேற்கொள்கிறோம்.பழைய பாரம்பரிய முறைகள் மூலம் வங்குரோத்து நிலையை அடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. நாம் புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

இந்தப் பயணம் எளிதானதல்ல என்பதை நாம் அறிவோம். மேலும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் நாம் அறிவோம். ஆனால், அந்தச் சவால்கள் அனைத்தையும் வெற்றிகொள்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு  வருகிறோம். நாட்டுக்கு நல்லதைச் செய்வதில் நமது அரசாங்கம் எப்போதும் உறுதியுடன் உள்ளது.இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு எங்கள் தாய்நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம். அன்று மக்கள் எதிர்கொண்ட நிலையை இன்று பலர் மறந்து விட்டனர்.

கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு இலக்குடன் சரியான பாதையில் செல்வதன் விளைவுகளை இன்று நாம் அனைவரும் அனுபவிக்கிறோம். 70 சதவீதமாக உயர்ந்திருந்த பணவீக்கம் தற்போது 25.2 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் வாழ்க்கைச் சுமை படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஒட்டுமொத்த சமூகமும் இந்த ஆறுதலை உணர ஆரம்பித்துள்ளது.

அடுத்து, நாங்கள் எப்படி முன்னோக்கிச் செல்லப்போகின்றோம் என்று நான் உங்களுக்கு விளக்க விரும்புகிறேன். எமது அடுத்த நடவடிக்கை அல்லது திட்ட வரைபடத்தில் நான்கு முக்கிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் நமது எதிர்காலத்தை நான்கு முக்கிய தூண்களில் கட்டியெழுப்புகின்றோம்.அவை முதலாவது தூண் – அரச நிதி மற்றும் மறுசீரமைப்பு,இரண்டாவது தூண் – முதலீட்டு ஊக்குவிப்பு,மூன்றாவது தூண் –  சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு,நான்காவது தூண் – அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு.

கூட்டாய்வு நடவடிக்கைகளுக்கு மக்களின் பங்களிப்பைப் பெறவும் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். 06 வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள், பகுப்பாய்வு மற்றும் முடிவுகளின் அடிப்படையில், பல்வேறு வேலைத்திட்டங்கள் குறித்து தயாரிக்கப்பட்ட திட்டங்கள், பொதுமக்கள் சந்திப்பு தினத்தில் அறிவிக்கப்படும். அந்த திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் முன்வைக்கப்படும். அதன் மூலம் மக்கள் தங்கள் கருத்துக்களையும் பதில்களையும் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படும். கூட்டாய்வு செயல்முறை மூலம் தயாரிக்கப்பட்ட திட்டங்கள் மக்களின் ஆலோசனைகளினால் மேலும் செம்மைப்படுத்திய பின்னர் அமுல்படுத்தப்படும்.

அதேபோன்று, நமது சீர்திருத்தம் மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் குறித்த அனைத்து தகவல்களையும் மக்களுக்கு வழங்க நான் நடவடிக்கை எடுப்பேன். ஜனாதிபதியின் வருடாந்த அறிக்கையாக இந்தப் பணியைச் செய்ய வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவதற்குள் கூட்டாய்வு செயல்முறையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். மூன்றாவது காலாண்டில், இணைப்புச் செயல்முறை மற்றும் தற்போது பொருளாதாரம் தொடர்பான விசேட செயலணிகளின் செயற்பாடுகள் திறந்த மற்றும் வெளிப்படையாக பொதுமக்களுக்கு முன்வைக்கப்படும்.

இவை அனைத்துக்கும் பிறகு, இந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் தேசிய மறுசீரமைப்புத் திட்டத்தை வெளியிட  நாம் எதிர்பார்த்துள்ளோம்.

செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நடைமுறைகளின் முன்னேற்றத்தை டிஜிட்டல் ஊடகம் மூலம் காண்பதற்கான வாய்ப்புகள் மக்களுக்கு வழங்கப்படும். நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தடைகளை எடுத்துக்காட்டும் வழிமுறையும் இதில் அடங்கும். அதன்படி, தடைகள் மற்றும் சிக்கல்களைக் கண்டறிவதற்கும் அவற்றை துரிதமாக தீர்க்கும் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.

இத்திட்டங்களை அமுல்படுத்துவதை ஒருங்கிணைக்கும் வகையில் அரச மற்றும் தனியார் துறை உயர் அதிகாரிகளைக் கொண்ட ஜனாதிபதி விசாரணைப் பணியகம் ஒன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. துறைசார் அமைச்சுகளுடனான ஒருங்கிணைப்புப் பணிகள் அவர்களினால் முன்னெடுக்கப்படும்.

இந்தச் சீர்திருத்தங்கள் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு சேர பயன் தரும் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் உட்பட முழு நாடும் முன்னேற்றம் அடையும். உங்களினதும் முழு நாட்டு மக்களினதும் வாழ்க்கைத் தரம் இதன் மூலம் உயர்வடையும்.

இது சமூகத்தின் ஒரு பிரிவினரை மட்டும் இலக்காகக் கொண்ட திட்டம் அல்ல. இது நாடு தழுவிய திட்டம் ஆகும்.

அப்போதுதான், இளைஞர்களின் வளப் பயன்பாட்டின் மூலம், இலங்கையின் ஏற்றுமதிக்காக சர்வதேச போட்டித்தன்மையை அதிகரிக்கவும், மனித மூலதன வளர்ச்சியின் அடித்தளத்தை விரிவுபடுத்தவும் வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாம் பொருளாதாரத்தை முழுமையாக ஸ்திரப்படுத்துவோம். அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் உயர் வருமானம் ஈட்டும் அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும். அதுவே எங்களின் நோக்கமாகும். முதல் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டைக் கட்டியெழுப்பும் பணி அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்கப்பட வேண்டும். அதற்காக நாம் இளைஞர்களை தயார்படுத்தி வருகிறோம். சீரமைக்கிறோம். அதாவது, சவால்களை எதிர்கொண்டு, 2048 ஆம் ஆண்டளவில் எமது தாய்நாட்டை முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு இளைஞர்கள் தோள் கொடுப்பார்கள் என்றும், நாட்டிற்கான இந்தப் பொறுப்பையேற்று அந்த இலக்கை அடைவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இது, எங்கள் அனைவரின் எதிர்காலத்தையும் கட்டியெழுப்பும் ஒரு வேலைத்திட்டம் ஆகும். நமது எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை மேம்படுத்தும் திட்டமாகும்.

எனவே, இந்தப் பணிகளின் வெற்றிக்கு நீங்கள் அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

2048 அபிவிருத்தி அடைந்த ஒரு நாடு. அதுவே எங்களின் இலக்கு. இந்த இலக்கை அடைவதே எங்கள் போராட்டம் .

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )