வலிகள் சுமந்த இனம்

வலிகள் சுமந்த இனம்

(முள்ளிவாய்க்கால் போரில் புதைக்கப்பட்ட எம் தமிழினத்துக்கான நினைவேந்தல் இது – 2023.05.18)

முள்ளிவாய்க்கால் ஓர்
கிள்ளுகீரை என
அள்ளிச்சென்ற
இரண்டாயிரத்து ஒன்பது
இருண்ட யுகம்.
இன்னும் எங்களுக்கு…

பதினான்கு வருடங்கள் கடந்தும்
முள்ளிவாய்க்கால் சில்லுதரை
சொல்லியழுகிறது..
அப்பாவி தமிழர்களின்
அழுகுரல்களை…

முதுகெலும்புகள் முறிந்து விழ
ஆலமரங்கள் சாய்வது போல்
ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன
அழகான குடும்பங்களும்
அன்பு போர்த்த மனங்களும்…

வெறும் சடலங்களாக மிஞ்சியது
நந்திக்கடல் ஈரங்களும்,
யுத்த சத்தத்தில் பட்டு
தெறித்து எஞ்சியது
வட்டுவாகல் ஓரங்களும்..

முள்ளிவாய்க்கால்
சொல்லிக்கொடுத்த பாசத்தில்
இரத்த வெள்ளத்தில் மிதக்கும்
முகங்கள்
பூமிக்கு முத்தமிடும்
காட்சியதில்
காலனவன்
வெட்கித் தலை குனிகிறான்…
பூமிபாலம் உடைந்து
அள்ளிச்செல்கிறது
பிணங்களை..
வானைப் பிளக்கும்
மரண ஓலங்கள்…
மாண்டு புதைந்த மாந்தர்கள்
வீரிட்டழுவது போல்
முக்காரமிடுகிறது..

உயிர் நீத்து வீழ்ந்து கிடக்கும்
சடலங்கள்
உயிர்தப்ப
எத்தனிக்கும் தன் உறவுகளுக்கு
முட்டுக்கொடுக்கிறது.
தப்பிச்செல்ல…

குண்டுகளுக்கு தன்
கண்கள் இரையானது
அறியாது
அலைமோதும் பிண நெரிசலில்
உயிரிழந்த
பல தந்தைகளில்
தன் தந்தை தேடி
தடவுகிறது குழந்தை..

பசிக்கு அழும்
பத்து மாதக் குழந்தை
இறந்து மடிந்து
ஈருடலாய் கிடக்கும்
தன் தாயின் மார்பகங்களின்
இரத்தத்தை புசிக்கிறது…

முள்ளியில் திரண்டிருந்த
வன்னி மக்களை
எண்ணித் துளைத்தது
முடிவிலா கொத்துக் குண்டுகள்.

தன் பசி தீர்க்க…
என் எழுதுகோல்
கண்ணீர் சிந்த எழுதப்பட்ட
இந்த
ஈரக்காவியம்
இலட்சக்கணக்கான
இழப்புகளை தந்த
முள்ளிவாய்க்காலின்
சாபத்தின் அந்தம்..

-மாலினி

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )