
முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி!!
2009 இல் ஈழத்தமிழர்கள் மீது ஒரு இனப்படுகொலையை சிங்கள இனவெறி அரசு செய்து முடித்தது.
150,000 பேர் இந்த இனப்படுகொலையில் கொல்லப்பட்டார்கள்.
கொடிய விசவாயு குண்டுகளை பயன்படுத்தி ஓர் இன அழிப்பு நடத்தப்பட்டது.
குழந்தைகள் குறிவைத்து அழிக்கப்பட்டனர். இதை சர்வதேச சமூகம் கைக்கட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்த்தது.
10 கோடி தமிழர்கள் உள்ள இந்த உலகில் ஈழத்தமிழர்கள் மீதான இனப் படுகொலையைத் தடுக்க, ஒரு நாடும் உதவ முன்வரவில்லை.

நாம் இந்தியர்கள். நம் நாடு இந்தியா. நமது நாடு மிகப்பெரிய நாடு.. என்று 70 ஆண்டு காலமாக குழந்தைப் பருவம் முதல் சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டோம். ஆனால், அந்த இந்தியாவும் இனப் படுகொலையைத் தடுக்கவில்லை. மாறாக துணை நின்றது.
‘தீர்மானம்’ போட்டதைத் தவிர, 7 கோடி தமிழர்களைக் கொண்ட தமிழ்நாட்டு அரசாலும் எதையும் செய்ய முடியவில்லை. எங்களாலும் ஒன்றும் செய்ய முடியாது, நாங்களும் அடிமைகள் தான் என்றார்கள் இங்கு அதிகாரத்தில் இருந்தவர்கள்.
தமிழ்நாட்டு மக்களாகிய நாம் நம் தொப்புள் கொடி உறவுகள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்வதைக் கண்டு கத்தினோம்… கதறினோம்…. கண்ணீர் மல்கத் துடிதுடித்தோம்…. எவன் காதுகளுக்கும் கேட்கவில்லை.
2009 மே18 இல் முடிந்தது முள்ளிவாய்க்கால் யுத்தம். குருதி நின்றது. நாடி அடங்கியது. ஆனால்…. மாண்டவர்களின் ஆன்மா மட்டும் விடுதலைக் காற்றை சுவாசிக்க இன்றும் துடியாய்த் துடிக்கிறது.
முள்ளிவாய்க்கால் முடிவல்ல..!
தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ ஒரு தேசம் வேண்டும் என்பதும் குற்றமல்ல..!! விடுதலை வேண்டும்.. அதை நாம்தான் பெறவேண்டும்.
-சிவரஞ்சனி.