ஜனாதிபதி பணித்ததை செய்ய மறுக்கும் பிரதமர்;  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றம்சாட்டு

ஜனாதிபதி பணித்ததை செய்ய மறுக்கும் பிரதமர்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றம்சாட்டு

அரச நிதி தொடர்பான தெரிவுக் குழுவின் தலைவர் பதவிக்கு ஹர்ஷ டி சில்வாவை நியமிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ள நிலையில் ஜனாதிபதியின் அறிவுறுத்தலை கூட செயற்படுத்தாதளவுக்கு பிரதமர் உள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டிய நிலையில் பொது பயன்பாட்டு ஆணைக் குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்கவுக்கு ஆதரவளிக்கும் ஹர்ஷ டி சில்வாவை அரச நிதி தொடர்பான தெரிவுக் குழுவின் தலைவர் பதவிக்கு நியமிப்பது எப்படியென அரச தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியநிலையில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரச நிதி தொடர்பான தெரிவுக் குழுவின் தலைவர் நியமனம் தொடர்பில் கேள்வி எழுப்பினார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச கூறுகையில்,

அரச நிதி தொடர்பான தெரிவுக் குழுவின் தலைவர் நியமனம் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியிலும் அரசாங்கத்துக்கு சார்பானவரை நிதி தொடர்பான தெரிவுக் குழுவின் தலைவராக நியமித்து எவ்வாறு சிறந்த முறையில் செயற்பட முடியும்?.ஆகவே அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு தலைவர் விவகாரம் தொடர்பில் இனி பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதில்லை என்றார்.

இதன்போது எழுந்த அரச தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அரச நிதி தொடர்பான தெரிவு குழு நியமனம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கபீர் ஹசீம்,ஹர்ஷ டி சில்வா ஆகியோர் பங்கேற்றனர்.அரச நிதி தொடர்பான தெரிவுக் குழுவின் தலைவர் பதவியை ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்க தெரிவுக்குழுவின் ஒருசில உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.அவரது செயற்பாடு முறையற்றது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற தெரிவிக் குழுவின் தலைவராக எதிர்க்கட்சி எம்பி ஹர்ஷ டி சில்வாவை நியமிப்பது தொடர்பில் அரச கட்சி எம்பிக்கள் மீண்டும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி சுமுகமான தீர்மானம் எடுக்கப்படும்ஹர்ஷ டி சில்வாவை அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக் குழுவின் தலைவராக நியமிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தாலும்

குழுவில் பெரும்பாலானோரின் இணக்கப் பாட்டின் கீழ் இதனை மேற்கொள்ள முடியும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்திலும் வெளியிலும் அது தொடர்பில் வீண் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொது பயன்பாட்டு ஆணைக் குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்கவை பதவி விலக்குவது தொடர்பான விவாதத்தில் ஹர்ச டி சில்வா அவருக்கு ஆதரவாக தெரிவித்த கருத்துக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

அந்த வகையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஜனாதிபதி அதற்கான இணக்கப்பாட்டினை தெரிவித்திருந்தாலும் ஜனாதிபதியே அவர் வேறு கட்சி உறுப்பினர் என பல தடவை அவரே தெரிவித்துள்ளார். அந்த வகையில் பெரும்பான்மை கட்சி என்ற வகையில் நாம் அது தொடர்பில் ஆராய்ந்தே தீர்மானம் எடுக்க முடியும். அதற்கிணங்க எமது குழு ஜனாதிபதியுடன் மீண்டும் கலந்துரையாடி அது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் என்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் தெரிவுக் குழுவுக்கு தலைவரை நியமிக்காமல் இருக்க முடியும் என்பது முறையற்றது. அவ்வாறான ஏற்பாடுகள் ஏதும் நிலையியல் கட்டளையில் இல்லை அரச தரப்பு பிரதம கொறடா காட்டு சட்டத்தை கூறுகின்றார் என்றார்.

இதனையடுத்து மீண்டும் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு ஆரம்பத்தில் எவ்வாறு இயங்கியது,தற்போது எவ்வாறு இயங்குகிறது என்பதை சபாநாயகர் அறிவார்.நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் ஹர்ஷ டி சில்வா பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெளிவு படுத்தியுள்ளார்.

அரச நிதி தொடர்பான தெரிவுக் குழுவின் தலைவர் பதவி வகித்துக் கொண்டு ஹர்ஷ டி சில்வா எடுத்த நடவடிக்கைகளினால் அரச தரப்பின் உறுப்பினர்கள் பொறாமை கொண்டார்கள்.இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.அரச நிதி தொடர்பான தெரிவு குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வாவை நியமிக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதியின் அறிவுறுத்தலை கூட செயற்படுத்தாத பிரதமர் உள்ளார்,ஜனாதிபதியின் அறிவுறுத்தலை ஏன் செயற்படுத்த முடியாது என பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளிக்க அரச தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முற்பட்ட போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியுடனான கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை பிரதமர், சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.ஆகவே பிரதமர் பதலளிக்கட்டும் என்றார்.ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளிக்கவில்லை.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )