மன்னார் உயிலங்குளத்தில் புதிதாக விகாரை

மன்னார் உயிலங்குளத்தில் புதிதாக விகாரை

மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542 வது படைப் பிரிவினால் அப்பகுதியில் புதிதாக பௌத்த விகாரை அமைக்க இராணுவத்தினால் வேலைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

உயிலங்குளம் பிரதேசத்தில் சில தினங்களாக இராணுவத்தினரால் புதிதாக பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாக மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் நேற்று திங்கட்கிழமை மதியம் அந்தப் பகுதிக்குச் சென்றார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கின் பல பாகங்களிலும் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542 வது படைப்பிரிவினர் அப்பகுதியில் புதிதாக ஒரு பௌத்த விகாரை யை அமைக்க வேலைகள் இடம்பெற்று வருகின்றது. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

மக்கள் மத்தில் நல்லிணக்கம் ஏற்படாமைக்கு, தொடர்ச்சியான இவ்வாறான செயற்பாடுகளே முக்கிய காரணங்களாக உள்ளது.

மன்னாரில் ஏற்கனவே 5 பௌத்த விகாரைகள் உள்ளன. மடு, முருங்கன், திருக்கேதீஸ்வரம்,சௌத்பார்,தலைமன்னார் போன்ற இடங்களில் அவை உள்ளன.ஆனால் இங்கே 50 பௌத்த குடும்பங்கள் கூட இல்லை.

பௌத்த மக்கள் இல்லாத இந்தப் பிரதேசத்தில் புதிதாக பௌத்த ஆலயங்களை அமைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.இராணுவமே இதனைச் செய்கிறது.

இந்த விடயத்தை உடனடியாக நான் புத்த சாசன அமைச்சரின் கவனத்திற்கும்,மாவட்ட திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.

மக்களிடம் இருந்து எனக்கு பல முறைப்பாடுகள் கிடைத்தன. இந்தப் பிரதேசத்தில் இராணுவத்தினால் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையிலே அந்தப் பகுதிக்குச் சென்று இதனை நேரடியாகப் பார்வையிட்டேன் எனவும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )