
நான் 8 முறை கூறியும் கேட்காத கோத்தபாய
காலி முகத்திடல் போராட்டகளத்துக்கு இடமளிக்க வேண்டாம், என அப்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவிடம் எட்டு முறை குறிப்பிட்டேன்.அனால் அவர் அதைக்கேட்க சுற்று இருந்தவர்கள் விடவில்லையென அரச தரப்பு எம்.பி.யம் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
பத்தரமுல்லவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் அரசை தோற்றுவித்தார்கள்.ஆனால் குறுகிய காலத்துக்குள் பொதுஜன பெரமுன அரசு மக்களால் வெறுக்கப்பட்டு அதளபாதாளத்துக்கு சென்று முழுமையாக இல்லாதொழிந்தது.இதற்கு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி,பிரதமர் உட்பட அமைச்சரவை முழுமையாக பொறுப்புக் கூற வேண்டும்.
காலி முகத்திடல் போராட்டகளத்துக்கு இடமளிக்க வேண்டாம்,ஜனநாயக போராட்டம் என்ற போர்வையில் தோற்றம் பெற்றுள்ள போராட்டம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என அப்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவிடம் எட்டு முறை குறிப்பிட்டேன்.அப்போதைய அமைச்சரவையில் இருந்தவர்களில் ஒருசிலர் காலி முகத்திடல் போராட்டம் ஜனநாயகமானது ஆகவே போராட்டத்துக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என கூறி அவரை தடுத்தது விட்டார்கள் அவர்கள் தற்போதைய அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கிறார்கள்.நான் கூறியது போன்றே காலி முகத்திடல் போராட்டம் இறுதியில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது.
எனவே நாடு என்ற ரீதியில் எதிர்கொண்ட பாரிய நெருக்கடி,தற்போதைய நிலைமை ஆகியவற்றை ஒரு படிப்பினையாக கொண்டு சகல அரசியல் கட்சிகளும் எதிர்வரும் காலங்களில் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.

