
தமிழர் பாரம்பரிய தாயகத்தை அங்கீகரிக்க கோரி பிரேரணை; அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்வைப்பு
-இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாராப்படுத்தவும் கோரிக்கை
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாராப்படுத்துவதுடன், ஈழத் தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தை அங்கீகரிக்குமாறு கோரி அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரேரணை முன்வைத்துள்ளனர்.
அத்துடன், நீடித்த, அமைதியான அரசியல் தீர்வு காண தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் அவர்கள் அறிமுகப்படுத்திய பிரேரணையில் கோரியுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று இடம்பெற்ற நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டெபோரா ரோஸ் (Deborah Ross) மற்றும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்சன் (Bill Johnsson) ஆகியோர் இந்தப் பிரேரணையை அறிமுகப்படுத்தினர்.
தமிழர் தாயகத்தின் மீதான இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறையை இந்த பிரேரணை சுட்டிக்காட்டுகிறது.
ஈழத் தமிழர்கள் தங்கள் பாரம்பரிய தாயகத்தில் தங்களைத் தாங்களே ஆளவும் உரிமைகளை அனுப்பவிக்கவும் தகுதியானவர்கள் எனவும் பிரேரணை கூறுகிறது.
26 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் மரணத்திற்கு வழிவகுத்தது. மக்கள் காணாமலாக்கப்பட்டனர். துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றன. எனினும் மனித உரிமை மீறல்களுக்கான தண்டனை விலக்கு தொடர்கிறது என பிரேரணை குறிப்பிடுகிறது.
2009 ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலை நடந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறத் தவறியதுடன், குற்றவாளிகளை முக்கிய அரசியல் பதவிகளில் அமர்த்தியுள்ளது. 2015 இல் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை 2020 இல் இலங்கை புறக்கணித்தது.
“போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை, சின்னச் சின்ன வழக்குகளில் கூட விசாரணைகள் தொடங்கவில்லை. அரசின் தன்னிச்சையான கைதுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன என அந்தப் பிரேரணை குறிப்பிடுகிறது.
இலங்கையில் போர் முடிவடைந்ததன் 14வது ஆண்டு நிறைவில் மோதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

