
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்க முடிவு; அரசுக்கு சவாலாக்கப் போகும் வாக்கெடுப்பு
ஆளும் தரப்பு எம்.பி.க்களில் 10 பேர் வெளிநாட்டில் மேலும் 20 எம்.பி.க்கள் எதிர்க்கும் நிலைப்பாட்டில்
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்காக எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில் பதவி நீக்கும் தீர்மானத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள போதும் அது சாத்தியப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆளும் கட்சிக்கு பாராளுமன்றத்தில் 120 உறுப்பினர் பெரும்பான்மை இருக்கின்றது. இந்த 10 பேரும் வாக்களிப்பின் போது சபையில் இல்லை என்றால் ஆளும் தரப்பு உறுப்பினர்களின் எண்ணிக்கை 110 ஆக காணப்படும்.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், அன்றைய தினம் ஆளும் கட்சி 113 உறுப்பினர்களின் பெரும்பான்மையைப் பெற வேண்டும்.
இதற்கு மேலதிகமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரை சந்தித்து தமது மனசாட்சிக்கு இணங்க இந்த பிரேரணைக்கு வாக்களிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தக் குழுவில் சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்குவதாகத் தெரியவருகிறது. இதனால் வாக்கெடுப்பு தொடர்பில் கட்சிக்குள் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ள வாக்கெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இதேவேளை அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு வர வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 24 ஆம் திகதி வாக்கெடுப்பை கருத்தில் கொண்டு அனைத்து அமைச்சர்களினதும் வெளிநாட்டுப் பயணங்களை அன்றைய தினம் இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

