
இலங்கையில் இன்னல்களை எதிர்நோக்கும் அனைவருக்கும் கனடா தொடர்ந்தும் குரல் கொடுக்கும்
இலங்கையில் தொடர்ந்து கஷ்டங்களை எதிர்நோக்கும் அனைவரது உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பதை கனடா நிறுத்தாது என்று அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று மே 18ஆம் திகதியன்று நினைவுக்கூரப்பட்டதை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயரமான உயிர் இழப்புகளை நாங்கள் சிந்திக்கிறோம்.
முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர்.
மேலும் பலர் காணாமல் போனவர்கள், காயமடைந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தனர்.
நமது எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்கள், இந்த அர்த்தமற்ற வன்முறையால் ஏற்படும் வலியுடன் தொடர்ந்து வாழ்கிறார்கள் என்று கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாகவே கடந்த ஆண்டு கனேடிய நாடாளுமன்றம் மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக பிரகடனப்படுத்தும் பிரேரணையை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது என்றும் கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
மதம், நம்பிக்கை மற்றும் பன்மைத்துவ சுதந்திரத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானங்களை இலங்கை ஏற்றுக்கொள்வது என்பது எதிர்வரும் ஆண்டுகளில், அந்த நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கான அத்தியாவசிய கூறுகளாகும்.
இந்தநிலையில் உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பணியைத் தொடருவோம் என்று தெரிவித்துள்ள கனேடிய பிரதமர், மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்கும் வகையில், நான்கு இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக தமது அரசாங்கம் தடைகளை விதித்தது என்று நினைவூட்டியுள்ளார்.
இதேவேளை கனடா அரசாங்கத்தின் சார்பாக, தமிழ்-கனடியர்கள், நாட்டிற்கு ஆற்றிய பல பங்களிப்புகளை அங்கீகரிக்க அனைத்து கனேடியர்களையும் தாம் அழைப்பதாக கூறியுள்ள அவர், இலங்கையின் ஆயுத மோதலின் தாக்கம் பற்றி அனைவரும் அறிந்துக்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையில் பாதிக்கப்பட்ட அல்லது அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்துங்கள் என்றும் அவர் கனேடிய மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

