தமிழர் வரலாற்றில் இன்று கறுப்பு நாள்

தமிழர் வரலாற்றில் இன்று கறுப்பு நாள்

முள்ளிவாய்க்காலில் அணி திரளுமாறு மக்களுக்கு அழைப்பு

முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்ட துயர் தோய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான ”மே 18” பெரும் துயர நாள் இன்று வியாழக்கிழமை தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர்தேசங்களில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

”மே 18” பெரும் துயர நாளின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் இடம்பெறுகின்றது .காலை 10 .30 மணிக்கு சுடரேற்றி நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு முதலில் உயிரிழந்த அனைத்து உறவுகளின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்படவுள்ளது

நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அச்சமின்றி அனைவரையும் நினைவேந்தலில் கலந்து கொள்ளுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு தமிழ் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் , தமிழின உணர்வாளர்களினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .

இன்றைய நாளில் வடகிழக்கு மகாணங்களிலும் ஏனைய இடங்களிலும் கறுப்புக் கொடியைப் பறக்கவிடுமாறும் மாலை 6 மணிக்கு வணக்கத் தலங்களில் மணி ஒலித்து, வீடுகளில் விளக்கேற்றி அக வணக்கம் செலுத்தி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறும் இயலுமான வரை முள்ளிவாய்க்கால் கஞ்சியையும் பரிமாறி தமிழின அழிப்பை நினைவுகூருமாறும் கோரப்பட்டுள்ளது

நாட்டில் சுமார் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்றுவந்த யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டில் டிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர், மே மாதம் 11 முதல் 18 ஆம் திகதி வரையான ஒரு வாரகாலப்பகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாகவும், 18 ஆம் திகதி போரில் உயிரிழந்தவர்களை நினைவுக் கூருவதற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாகவும் தமிழ்மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த ஒரு வாரமாக தமிழர் தாயகமான வடக்கு,கிழக்கு மாகாணங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதுடன் ”மே 18” பெரும் துயர நாள் நினைவுச் சின்னம் தாங்கிய ஊர்தி .பவனிகளும் முன்னெடுக்கப்பட்டன.இதன்போது பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் முஸ்லிம் மக்களும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி நினைவு கூர்ந்தனர்.

இந்நிலையிலேயே இன்றுவரை நீதி வழங்கப்படாத இனப்படுகொலையின் 14 ஆம் ஆண்டிற்கான நினைவேந்தல் இன்று 18 ஆம் திகதி வியாழக்கிழமை கிழமை முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும் அதே நேரத்தில் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உள்ள ”மே 18” நினைவிடங்களிலும் நினைவேந்தல்கள் இடம்பெறவுள்ளன. இதேவேளை கிழக்கு மாகாணத்திலிருந்தும் வடக்கிலிருந்து புறப்பட்ட ”மே 18” பெரும் துயர நாள் ஊர்தி பவனிகளும் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தை வந்தடையவுள்ளன .

அதேவேளை இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று கொழும்பிலும் இடம்பெறவுள்ளன.இன்று காலை 10.30 மணிக்கு பொரளை கனத்தை சுற்றுவட்டத்தில் இந்நிகழ்வுகள் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.வடக்குகிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதத்தில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் வெள்ளை மலர்களை கொண்டுவரலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் ”மே 18” பெரும் துயர நாள் இன்று வியாழக்கிழமை தமிழர் தாயகமெங்கும் உணரவே பூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் பல இடங்களிலும் இராணுவம், பொலிஸார் ,விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தை அண்டிய பகுதிகளில் இராணுவத்தினர் பெருமளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் புலனாய்வுத்துறையினரும் பல இடங்களில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களை அமைதியான முறையில் நினைவு கூர முடியும் .ஆனால் யுத்தத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளை நினைவு கூர முடியாதென அரசு அறிவித்துள்ள நிலையிலேயே பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )