இராணுவம்,விசேட அதிரடிப்படை, பொலிஸாரின் தடைகளையும் மீறி ஆலயக் காணிக்குள் அத்துமீறி நுழைந்த பிக்குகள் குழு

இராணுவம்,விசேட அதிரடிப்படை, பொலிஸாரின் தடைகளையும் மீறி ஆலயக் காணிக்குள் அத்துமீறி நுழைந்த பிக்குகள் குழு

2000க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுசேர்ந்தனர்; திருகோணமலை பிரதேசத்தில் பெரும் பதற்றம்

திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள வில்லூன்றி கந்தசாமி ஆலயத்திற்கு சொந்தமான காணியில் புத்தர் சிலை,பௌத்த சின்னங்களை நிறுவும் பிக்குகளின் முயற்சிக்கு ஜனாதிபதியின் பணிப்பில் அரச அதிபரால் தடை விதிக்கப்பட்டிருந்த போதும் இராணுவம்,விசேட அதிரடிப்படை, பொலிஸாரின் தடைகளையும் மீறி பிக்குகள் தலைமையில் வில்லூன்றி கந்தசாமி ஆலயத்திற்கு சொந்தமான காணிக்குள் அத்துமீறி நுழைந்த 2000க்கும் மேற்பட்டவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

எனினும் அந்தக்காணிக்குள் அத்துமீறி நுழைந்த பிக்குக தலைமையிலான சிங்களவர்களினால் புத்தர்சிலையோ பௌத்த சின்னங்களோ நிறுவப்படாத நிலையில் பௌத்த வழிபாடுகளையும் பிக்குகள் தலைமையிலான கூட்டம் ஒன்றையும் நடத்தி சில தீர்மானங்களை எடுத்த பின்னர் அங்கிருந்து வெளியேறி சென்றனர்.

திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால்உள்ள வில்லூன்றி கந்தசாமி ஆலயத்திற்கு சொந்தமான காணியில் தாய்லாந்தில் இருந்து வரும் பிக்குகளால் புத்தர் சிலை மற்றும் பௌத்த சின்னங்களை வைப்பதற்கு பிக்குகளால் கடந்த சில வாரங்களாக முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் அதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் தமிழ் தரப்புக்கள் ஈடுபட்டன .இந்நிலையில் பிக்குகளின் இந்த முயற்சியை தமிழ் தரப்புக்கள் தடுத்து நிறுத்த முயன்றால் தமிழ் தரப்புக்களுக்கு பாரிய அழிவு ஏற்படுமென முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி.யுமான சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் வைத்து பகிரங்கமாக கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனால் திருகோணமலையில் சிங்கள, தமிழ் மக்களிடையில் ஒரு முறுகல் நிலையும் ,பதற்றமான சூழலும் ஏற்பட் ட நிலையில் திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள வில்லூன்றி கந்தசாமி ஆலயத்திற்கு சொந்தமான காணியில் புத்தர் சிலை,பௌத்த சின்னங்களை நிறுவும் பிக்குகளின் முயற்சிகளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவசரமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் .

இதையடுத்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, திருகோணமலை மாவட்ட அரச அதிபரை தொடர்பு கொண்டு இனங்களுக்கிடையில் முறுகல்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்திருந்த உத்தரவைத் தெரிவித்ததோடு, அது குறித்த நடவடிக்களையும் முன்னெடுக்குமாறும் பணித்திருந்தார்.

இதனையடுத்து ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைவாக, திருகோணமலை மாவட்ட அரச அதிபர் அஸ்கிரிய பீடாதிபதி மற்றும் குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்த பிக்குகள் தரப்பினர் உள்ளிட்டவர்களுக்கு தகவல் அனுப்பியதுடன் பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு பணித்தார்

இதனைத் தொடர்ந்து புத்தர் சிலையை வைப்பதற்கான பூர்வாங்கச் செயற்பாடுகள் எவையும் சனிக்கிழமை இரவு வரை முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.

இதேவேளை, பிக்குகளின் இந்த புத்தர் சிலை வைக்கும் முயற்சிக்கு எதிராகத் தமிழ்த் தேசியப் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் குறித்த காணிக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டதுடன் அதில் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மணிக்கூட்டுக்கோபுரம் அருகில் பிக்குகள் தலைமையில் ஒன்று திரண்ட 2000க்கும் மேற்பட்ட சிங்களவர்கள் நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள தொல்பொருள் திணைக்களம் அடையாளப்படுத்தியிருந்த நிலம் தங்களுக்கு சொந்தமானதென கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதால் இராணுவம், அதிரடிப்படை ,பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.இந்நிலையில் பிக்குகள் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிங்களவர்கள் மிகவும் ஆவேசமான நிலையில் நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள காணிக்கு ஊர்வலமாக கோஷங்களை எழுப்பியவாறு செல்ல முயன்றனர்.

இவ்வாறு ஆவேசமாக ஊர்வலமாக சென்ற இவர்களை 3 இடங்களில் வைத்து தடுக்க இராணுவத்தினர்,அதிரடிப்படையினர் ,பொலிஸார் பெரும் முயற்சிகளை எடுத்தபோதும் அவற்றையெல்லாம் உடைத்துக்கொண்டு பிக்குகள் முன்னே செல்ல பின்னால் கோஷங்களை எழுப்பியவாறு தடை விதிக்கப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் அங்கு பௌத்த சமய நிகழ்வுகளை முன்னெடுத்தனர். இதன்போதும் அந்த காணியை சுற்றி பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டிருந்தனர். அங்கும் ”இது எமக்கு சொந்தமான இடம்’ எனக்கூச்சலிட்ட சிங்களவர்கள் பிக்குகள் தலைமையில் கூட்டம் ஒன்றையும் நடத்தி சில தீர்மானங்களை எடுத்த பின்னர் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.

திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள வில்லூன்றி கந்தசாமி ஆலயத்திற்கு சொந்தமான காணியில் புத்தர் சிலை. பௌத்த சின்னங்களை தாய்லாந்து பிக்குகளின் தலைமையில் நிறுவுவதே பிக்குகளின் நோக்கமாக இருந்தபோதும் நேற்று அவர்கள் புத்தர் சிலையையோ,பௌத்த சின்னங்களையோ நிறுவாது பௌத்த மத வழிபாடுகளை மட்டுமே நடத்திவிட்டு சென்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )