ரணில்-தமிழ் எம்.பி.க்கள் பேச்சு திடீரென இரத்து; மீண்டும் திங்கட்கிழமை என அறிவிப்பு

ரணில்-தமிழ் எம்.பி.க்கள் பேச்சு திடீரென இரத்து; மீண்டும் திங்கட்கிழமை என அறிவிப்பு

வடக்கு,கிழக்கு மாகாண தமிழ் எம்.பி.க்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 3 நாட்களுக்கு நடத்த விருந்த பேச்சுவார்த்தையில் முதல் நாள் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நடத்தப்பட்ட நிலையில் 12,13 ஆம் திகதிகளுக்கான ஏனைய இரு நாள் பேச்சுவார்த்தைகளும் திடீரென இரத்து செய்யப்பட்டதுடன் மீண்டும் திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு பேச்சுவார்த்தை இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி, அதிகாரப்பகிர்வு ,நிலவிடுவிப்புக்கள் தொடர்பில் வடக்கு,கிழக்கு மாகாண தமிழ் எம்.பி.க்களுடன் 11,12,13 ஆகிய தினங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்த அழைப்புவிடுக்கப்பட்ட நிலையில் 11 ஆம் திகதி வியாழக்கிழமை வடக்கு,கிழக்கு மாகாண தமிழ் எம்.பி.க்களுடன் பேச்சு நடத்திய நிலையிலேயே 12,13 ஆம் திகதிகளுக்கான பேச்சுக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள ‘அஷ்வசும’ நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட் டளை சட்டத்தின் கீழான தீர்மானம் ஆகியவற்றின் மீதான வாக்கெடுப்பில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டுமெனக்காரணம் கூறியே இரு நாட்களுக்கான சந்திப்பும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இரு நாட்களுக்குமான பேச்சுக்கள் இரத்து செய்யப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மேலதிக செயலாளர் இளங்கோவனினால் வடக்கு,கிழக்கு மாகாண தமிழ் எம்.பி.க்களுக்கு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற, வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள ‘அஷ்வசும’ நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டம் தொடர்பான விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாலேயே இந்தப் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை நடைபெறாதென தமிழ் எம்.பி.க்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதும், பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை அவ்வாறானதொரு வாக்கெடுப்பு எதுவும் நடைபெறவில்லை.

வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்தியபேச்சுக்களின் போது காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை , காணிப்பிரச்சினைகள் , தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புக்கள், நல்லிணக்க ஆணைக்குழு என பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் வடக்கு,கிழக்கு மாகாண தமிழ் .எம்.பிக்கள் கருத்துக்கள், கண்டனங்கள், கோரிக்கைகள் ,கேள்விகளை முன்வைத்திருந்த போதும் ஜனாதிபதியினால் உறுதியான தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லையென கலந்து கொண்ட எம்.பி.க்களில் பலர் விசனம் வெளியிட்டிருந்தனர்

இந்நிலையில் வடக்கு,கிழக்கு தமிழ் எம்.பி.க்களை அழைத்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுகளை நடத்துவது போல் வடக்கு,கிழக்கு மாகாண முஸ்லிம் எம்.பி.க்களையும் அழைத்து ஜனாதிபதி பேச்சு நடத்த வேண்டுமென முஸ்லிம் எம்.பி.க்களினால் வலியுறுத்தப்பட்ட நிலையிலேயே 12,13 ஆம் திகதிகளுக்கான ஜனாதிபதியின் பேச்சுக்கள் வாக்கெடுப்பைக் காரணம் காட்டி இரத்து செய்யப்பட்டுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )