
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ரணிலை நம்பியே பேச்சுக்கு செல்கிறோம்
”இனப்பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சு” எனக் கூறிக் கூறி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை அரசியல் தீர்வு விவகாரத்தை இழுத்தடித்துச் செல்ல ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிடுவாரானால் அது வெற்றி பெறாது.தமிழ் மக்களின் வாக்குகளும் கிடைக்காது.எங்களை ஏமாற்றி ஜனாதிபதியாக பதவியேற்றாலும் முறையாக அவரால் பதவி வகிக்க முடியாது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
அத்துடன் இந்த 3 நாள் பேச்சுக்கு வடக்கு ,கிழக்கு தமிழ் அரசியல் வாதிகளுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பை எவரும் புறக்கணிக்கக் கூடாது. அப்படிப் புறக்கணிப்பார்களேயானால் அவர்களின் நிலைப்பாடு தொடர்பில் தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இலங்கைக் கடலில் விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான சபை ஒத்தி வைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த சாணக்கியன் எம்.பி. மேலும் கூறுகையில்,
நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கு தொடர்ந்து ஆணை வழங்கி வருகிறார்கள். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக விடுக்கப்படும் சகல அழைப்புக்களின் போதும் வெளிப்படை தன்மையுடனும், எதிர்பார்ப்புடனுமே பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கின்றோம்.
75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி உறுதியளித்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.இந்தப் பேச்சுவார்த்தையில் சிறந்த தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எமது தலைவர் இரா.சம்பந்தன் இதயசுத்தியுடன் கலந்து கொண்டார்.இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று ஒவ்வொரு முறையும் அழைப்பு விடுக்கும் போது அதனை புறக்கணிக்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சு வார்த்தைகளில் கலந்துக் கொண்டுள்ளது.
தற்போதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் அரசியல்வாதிகளை தனித்தனியாக சந்திக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இவ்விடயம் தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் மத்தியில் மாறுபட்ட பல நிலைப்பாடுகள் காணப்பட்டன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை வேறுபடுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தோம்.இதனை தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகளை ஒன்றாக சந்திக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.இதற்கமைய நாளை (இன்று) காணி விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது,12 மற்றும் 13 ஆம் திகதிகளில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
இனப்பிரச்சினைக்கும் அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையிலான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு கிடைக்கும் போது அதனை தமிழ் தரப்பினர் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தமிழ் தலைமைகளுக்கு தொடர்ந்து ஆணை வழங்குகிறார்கள்.ஆகவே ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் பேச்சுவார்த்தையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் அரசியல்வாதிகள் கலந்து கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை அரசியல் தீர்வு விவகாரத்தை பேச்சுவார்த்தை ஊடாக முன்னெடுத்து செல்ல ஜனாதிபதி திட்டமிடுவாரானால் அது வெற்றி பெறாது.தமிழ் மக்களின் வாக்குகளும் கிடைக்காது.தமிழ் மக்களின் ஆதரவினால் மாத்திரம் ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியாது என்பதை நன்கு அறிவோம். ஆனால் எங்களை ஏமாற்றி ஜனாதிபதியாக பதவியேற்று முறையாக பதவி வகிக்க முடியாது. சர்வதேசத்தின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

