இனப்பிரச்சினைத் தீர்வு; நாளை பேச்சு ஆரம்பம்

இனப்பிரச்சினைத் தீர்வு; நாளை பேச்சு ஆரம்பம்

-கிழக்கு எம்.பிக்களையும் அழைக்க நேற்றைய சந்திப்பில் ஜனாதிபதி இணக்கம்

-வியாழன் அடிப்படை பிரச்சினைகள், வெள்ளி அதிகாரப் பகிர்வு குறித்து பேச முடிவு

இனப்பிரச்சினைத் தீர்வு குறித்த பேச்சுக்கு முன்னோடியாக பேச்சுக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து ஜனாதிபதி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கிடையிலான நேற்றைய சந்திப்பில் ஆராயப்பட்டது.

இதன்போது 11, 12 ஆம் திகதிகளில் பேசப்படவுள்ள விடயங்கள் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன், பேச்சுக்கு வடக்கு எம்.பிக்கள் மட்டுமன்றி கிழக்கு எம்.பிக்களையும் அழைக்க வேண்டும். தனித்து வடக்கு எம்.பிக்களை அழைத்தமையை ஏற்க முடியாது என கூட்டமைப்பு எம்பிக்கள் நேற்றைய பேச்சில் ஜனாதிபதியிடம் அழுத்தமாக வலியுறுத்தினர். இதையடுத்து பேச்சில் கிழக்கு தமிழ் எம்.பிக்களையும் அழைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, நாளை வியாழக்கிழமை முதல் நாளில் காணிப் பிரச்சினை, தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினை, பயங்கரவாத தடுப்புச் சட்டம், நல்லிணக்கம் ஆகிய விடயங்கள் குறித்து பேச இணக்கம் காணப்பட்டது.

அத்துடன், வெள்ளிக்கிழமை அதிகாரப் பகிர்வு குறித்துப் பேச இணக்கம் எட்டப்பட்டது எனவும் சுமந்திரன் கூறினார்.

நேற்று 3.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமான இச்சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஜனாதிபதியுடன், ஜனாதிபதியின் ஜனாதிபதியின் செயலாளர், மேலதிக செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழர் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், மற்றும் சி. சிறீதரன் ஆகியோர் பங்கேற்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )