
இலங்கையில் மீண்டும் கோவிட் அச்சுறுத்தல்?
தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் கோவிட் -19 நோய்த் தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு இலங்கையில் சுகாதார அமைச்சு பொது மக்களை வலியுறுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் தலைவர் டாக்டர் சமிதா கினிகே டெய்லி மிரரிடம் பேசுகையில்,
“தினசரி நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்துள்ள போதிலும், பாரிய தடுப்பூசி இயக்கத்தில் நாம் ஈடுபட்டுள்ளதால், நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரியவில்லை” என்று கூறினார்.
இருப்பினும், கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட முடியாது என்று கூறுவதற்கு இது உத்தரவாதம் இல்லை என்றும் அவர் கூறினார்.
“எவரும் வைரஸால் பாதிக்கப்படலாம், இருப்பினும் வெற்றிகரமான தடுப்பூசி இயக்கத்தின் காரணமாக கடுமையான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு,” என்று அவர் சுட்டிக் காட்டினார்.
“பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போட முடிந்ததால், பேரழிவுகரமான பரவல்களுக்கு வழிவகுக்கும் சாத்தியக்கூறுகள் குறைவு” என்றார்.
தற்போதைய தொற்றுகள் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன என்று கேட்டபோது, “சளி அல்லது காய்ச்சலால் கண்டறியப்பட்ட ஒவ்வொருவரையும் நாங்கள் பரிசோதிப்பதில்லை. நோயாளியை கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமா என்பதை மருத்துவ அதிகாரி தான் முடிவு செய்ய வேண்டும்.
“நாங்கள் எங்கள் சோதனையை அதிகரித்தால், மேலும் தொற்றுகள் அடையாளம் இருக்க காணப்படலாம். எனினும், தடுப்பூசி மூலம் மக்கள் பெற்றுள்ள வலுவான நோய் எதிர்ப்பு சக்தியைக் கருத்தில் கொண்டு, பரிசோதனை திறனை அதிகரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று டாக்டர் கினிகே வலியுறுத்தினார்.
“கோவிட் நிலைமை கட்டுக்குள் வந்தாலும் எங்கள் கண்காணிப்பு பொறிமுறையை நாங்கள் ஒருபோதும் அகற்றவில்லை. எவ்வாறாயினும், கண்காணிப்பு பொறிமுறையை மேற்கொள்ளும் மூலோபாயத்தை நாங்கள் இப்போது மாற்றியுள்ளோம், ”என்று அவர் மேலும் கூறினார்.
தொற்றுநோயியல் பிரிவின் புள்ளி விபரங்களின்படி, கடந்த 10 நாட்களில் சராசரியாக மூன்று தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த ஐந்து நாட்களில் பதிவு செய்யப்பட்ட தொற்றாளர்களின் சராசரி எண்ணிக்கை ஆறு என்று தரவு மேலும் காட்டுகிறது.
வெளிநாட்டு ஊடகங்களின் தகவல்களின் படி, சிங்கப்பூரின் நோய்த் தொற்றானது, மார்ச் இறுதி வாரத்தில் அதிகபட்சமாக இருமடங்காக அதிகரித்தன, ஆகஸ்ட் பிற்பகுதிக்குப் பிறகு இந்தியா அதன் மிகப்பெரிய ஒரு நாள் எண்ணிக்கையைப் பதிவுசெய்தது, அதே நேரத்தில் இந்தோனேசியாவின் தினசரி தொற்று கடந்த நான்கு மாதத்தில் அதிகரித்து உள்ளது மற்றும் வியட்நாமிலும் அதிகரித்து வருகிறது.
இத்தகைய பின்னணியில், சுகாதார அமைச்சக அதிகாரிகள் முகக் கவசம் அணிவது போன்ற சுகாதார நடவடிக்கைகளுக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளனர்.

