
நானும் ரணிலும் உயிருடன் இருக்கமாட்டோம்
இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமியிலேயே கொள்ளையடித்த ராஜபக்ஸக்கள் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விடயத்தில் இலஞ்சம் பெற்றிருக்கமாட்டார்கள் என்று கருத முடியாது என முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக் கிழமை இரண்டாவது நாளாக இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப். ) நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குற்றம்சாட்டிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேலும் பேசுகையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அழகாக உரையாற்றுகிறார் .2048 ஆம் ஆண்டு நாட்டை அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.2048 ஆம் ஆண்டு அவரும் உயிருடன் இருக்கமாட்டார்,நானும் உயிருடன் இருக்கமாட்டேன்,ஆகவே பொய்யை முன்னிலைப்படுத்தி ஆட்சி செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி தீர்வு கண்டு விட்டதாக ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.பொருட்களின் விலை மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.2000 ரூபாவாக காணப்பட்ட மின்கட்டணம் 6000 ரூபாவாக காணப்படுகிறது.நடுத்தர மக்கள் தமது அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடுகிறார்கள்.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.சாரா எனப்படும் புலஸ்தினி உயிருடன் உள்ளாரா இல்லையா என்பது இழுபறி நிலையில் உள்ளது.குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டிய நபர் குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் போது சிங்கப்பூர் நாட்டுக்கு ஓடி ஒளிந்தார்.இப்போது நியாயத்தை பற்றி கருத்துரைக்கிறார்.
எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமியிலேயே கொள்ளையடித்த ராஜபக்ஸக்கள் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் ஊடாக இலஞ்சம் பெற்றிருக்கமாட்டார்கள் என்று கருத முடியாது.கப்பல் தொடர்பான வழக்கு தாக்கல் ராஜபக்ஸக்களினால் தாமதப்படுத்தப்படுகிறது என்ற சந்தேகம் உள்ளது என்றார்.

