
நெருப்பில் பூத்த மலர்கள்
(பாரி)
உலகமே ஸ்தம்பித்துப் போனதான உணர்வு. காற்றுப் பைகள் கனத்து மூச்சு உள்ளே போக மறுத்தது. மண்டையினுள் அலார ஒலி. யாரிடம் சொல்வேன்? எப்படியென்று சொல்வேன்? தேகம் அனலாய்க் காந்தியது. தேகமா? என்னுடையதா? அருவெறுப்பு வாந்தியாக வர, கண்ணாடி முன்பு நின்று அழகுக்கு அழகு சேர்த்த என்னுடைய மேனி சாக்கடையில் வீழ்ந்த பூவைப்போல…. எத்தனை தடவைகள் சுரண்டிச் சுரண்டிக் குளித்தாலும் போகாத அழுக்கு.
“கடவுளே …!! எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை? நான் மனசறிந்து யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யேல்லையே…ஐயோ..!!”
“ கமலி….அடியே…… கமலீ….! எத்தினை தரம் கூப்பிடுறது? போனை நோண்டிக் கொண்டு இருந்தால் எதுவுமே காதிலை விழாது…”
அம்மா பெருங்குரலில் திட்டியவாறு கதவைத் திறந்துகொண்டு என்னுடைய அறைக்குள் வந்தா. துள்ளிப்பாய்ந்து எழும்பினேன். நடு மைதானத்தில் அம்மணமாக நிற்பது போன்ற உணர்வு. உடலெல்லாம் கூசியது. நான் தடுப்பதற்கு முன் ஊத்தை உடுப்புகளை வாரி எடுத்தா.
“ என்னடி இது…? ரத்தக்கறை? சட்டை கிழிஞ்சும் கிடக்கு….?”
ஊத்தை உடுப்புகளுக்கிடையில் இதுவும் சரியாக அம்மாவின் பார்வையில் விழுந்து விட்டது. அம்மா சந்தேகமாகப் பார்த்தா.
“ நான்.. அது …. அது வந்து… அண்டைக்கு நாயள் துரத்தி….. பத்தைக்குள்ள விழுந்தனான்…சொ..சொன்னனான்தானே……”
நெஞ்சுக்குழிக்குள் தடதடப்பு. ஓவென்று கூக்குரலிட்டு அழவேண்டும் போலிருந்ததை எப்படி அடக்க முடிந்தது என்று புரியவில்லை.
“ ஓம்…கால்லயும் கையள்ளையும் கீறல் காயங்களுக்கு மருந்து போட்டனியே..? ஏன் வைச்ச தேத்தண்ணி கூட குடிக்கேல்லை? அதிசயமா போனைக் கூட தொடேல்லை…!!”
“ என்னுடைய எந்தக் காயத்துக்கெண்டு மருந்து போடுறது? அம்மாஆ…அந்த நாயள் என்னைச் சிதைச்சுப் போட்டாங்களே அம்மா ….!!!!”
மனதினுள் கதறி அழுதேன். யாரிடமும் சொல்ல முடியாது … சொல்லக் கூடாது. தெரிய வந்தால்…? குடும்பத்தின் நிலைமையை நினைத்து இதயம் பதறியது.
வீட்டில் நானும் அம்மாவும் தம்பியும் மட்டும்தான். அப்பாவும் அண்ணாவும் வெளிநாட்டிலை இருந்து காசு அனுப்பிக் கொண்டிருக்கினம். எங்கடை வாழ்க்கை முறையே மாறிவிட்டது. நாங்கள் மட்டுமில்லை, அண்டை அயல் எல்லாரும்தான் மாறி விட்டார்கள். முந்தின மாதிரி சமூகம், பந்தம் என்ற உணர்வுகள் அருகிப் போயிட்டுது. எல்லோரும் ஒருமாதிரி ‘பந்தா’வாக வாழப் பழகி விட்டினம்.
நாங்களும் புதுவீடு கட்டிக்கொண்டு வந்திட்டம். எந்த வசதிக்கும் குறைவில்லை. நாங்கள் என்ன கேட்டாலும் நடக்கும். முதல்ல அம்மா சுணங்குவா. பிறகு கேட்டதுகளை வாங்கித் தந்திடுவா. பிறகு… தெரிஞ்ச ஆக்கள் எல்லாருக்கும் பெருமையாகச் சொல்லிப் புலம்புவா.
‘ ஐபோன் கேட்டவா. குடுக்காட்டா, பேந்து தகப்பனுக்கு கோவம் வந்திடும்.’ என்றோ
‘தம்பி மோட்டச்சைக்கிள் கேட்டவன்…. குடுக்காட்டா இந்தக்காலத்துப் பிள்ளையளைத் தெரியுந்தானே? ஏதேனுஞ் செய்து போடுங்கள்’ என்றோ அல்லது
‘ உந்த தின்ன வழியில்லாமல் கிடந்ததுகளே என்னமாதிரித் திரியுதுகள். எங்கடை பிள்ளையள் வக்கத்தவை மாதிரி இருக்கலாமே?’ என்றோ எங்களுடைய வசதியைத் தம்பட்டமடிப்பதில் ஒரு பெருமை. அம்மாவில் கூட சரியான மாற்றம். எந்த நேரமும் ரி.வி யில சீரியல் பார்க்கிறதிலயும் போன் அடிச்சு நகைகள், புடவைகளைப் பற்றி நண்பிகளுடன் கதைப்பதிலும், ‘பேஸ்புக்’ இல் ‘ஸ்ரேரஸ்’ போடுவதிலும் இருக்கும் ஆர்வம் வீட்டில் சமைப்பதில் இல்லை. நாங்களும் கவலைப்படுவதில்லை. இப்பதானே.. நினைத்த மாதிரிச் சாப்பாடு எடுக்கலாம்.
எனக்கும் முகநூலில் ஆயிரக்கணக்கான நண்பர்கள். நான் போடும் ஒவ்வொரு பதிவிற்கும் ‘லைக்’குகளும் ‘கொமென்ட்’டுகளும் வந்து விழும். வெளிநாடு போகும் மட்டும் படிப்பை ஒரு பொழுதுபோக்காக தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
அன்றைக்கும் அப்படித்தான். ‘ரியூசன்’ முடிந்த பின் நண்பிகளுடன் அரட்டை. நேரம் போனதே தெரியவில்லை. சைக்கிளை மிதித்தபடி வாழைத்தோட்டத்துப் பாதையால் வந்துகொண்டிருந்தேன். இருட்டிவிட்டது. பின்னால் மோட்டார் சைக்கிள்கள் வரும் சத்தம் கேட்டது. வழி விடுவதற்காக ஓரமாக ஒதுங்கினேன். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு பேர் வந்தார்கள். அதில் ஒருவர் நன்கு தெரிந்தவர்தான். முகநூலில் எனது நண்பரும் கூட.
“ என்ன இந்தப் பக்கம்? தனியவோ வந்தனீங்கள்? “
கேட்டவாறே இறங்கினார்.
“ ஓம்… பிரண்சிட்டைப் போட்டு வரப் பிந்தீட்டுது…..”
என்ன நடக்கிறது என்று நான் சுதாகரிப்பதற்கு முன், நான் நண்பன் என்று நினைத்தவனே என்னுடைய வாயைப் பொத்தினான். என்னுடைய துப்பட்டாவினாலேயே என்னுடைய வாயையும் கைகளையும் கட்டி வாழைத்தோட்டத்தின் உட்புறத்துக்கு என்னைத் தரதரவென்று இழுத்துப் போனார்கள். கத்த முடியவில்லை, ஓடமுடியவில்லை. ‘இந்த அரக்கர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று கடவுளே!’ என்று எல்லாக் கடவுளையும் கூப்பிட்டு மன்றாடினேன். நான் புழுவாகத் துடிக்கத்துடிக்க மாறி மாறி என்னைச் சீரழித்தார்கள். உடலும் மனமும் ரணமாக கட்டாந்தரையில் மல்லாந்து கிடந்தேன் நான். என்னைச் சுற்றி மதுவும் காமமும் கலந்த குரல்கள்……. என்னைக் குதறியவர்களின் குரல்கள். கை கொட்டிச் சிரித்தன. ஏளனமாக நகைத்தன. முடியாதோ என்று நீண்ட துன்பம் முடிவுக்கு வந்தது.
‘வீட்டில சொன்னால்….. ஊருக்குள்ள நாறிப் போவியள். எல்லாரும் தூக்கில தான் தொங்க வேணும்.’
‘கண்டவனும் வந்து கதவைத் தட்டுவான்’
‘உன்ரை தம்பியை வெட்டிப் போடுவம்’
பல்வேறு வகையான அச்சுறுத்தல்களின் பின் அவர்கள் கிளம்பினர். இனி என்ன நடந்தால்தான் என்ன?
‘ திறமா வீடியோ எடுத்து வைச்சிருக்கிறம்… ‘நெற்’ இல விட்டால் நல்லா ஓடும். வீட்ட போய் சாக வெளிக்கிட்டாலோ, இல்லை ஆருக்கும் சொன்னாலோ ….பேந்து, வீடு வீடாப் படக் காட்சிதான். ஞாபகம் வைச்சிரு.’ அவர்கள் இறுதியாகச் சொல்லிவிட்டு போய்விட்டார்கள். நான் எப்படி வீடு வந்தேன் என்பது ஞாபகத்தில் இல்லாமல் நடைப்பிணமாக வீடு வந்தேன்.
அம்மா சீரியலில் முனைப்பாக இருந்தா. என்னையோ, என்னுடைய நிலையையோ திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
“ மேசையில சாப்பாடு கிடக்கு. போட்டுச் சாப்பிடு. இண்டைக்கு ஒரு மணித்தியால சிறப்புக் காட்சி. முடிச்சிட்டுத்தான் நான் வருவன்.”
நான் என்னுடைய அறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டேன். நீண்டநேரமாக தேய்த்துத் தேய்த்து குளித்தேன். நிணமும் கண்ணீரும் தண்ணீருடன் கலந்து ஓடின. அழுக்கும் அருவெறுப்பும் போகவேயில்லை.
வெளிச்சத்தில் நிர்வாணமாக நிற்பது போன்ற உணர்வு. இருட்டிலே முடங்கிக் கிடந்தேன். வாழ்வே இருண்டு போனபின் வெளிச்சம் போட்டு என்ன பயன்? கண்ணீரும் வற்றிப் போனது. அருவெறுத்த குரல்கள் மட்டும் என்னுடைய மண்டைக்குள் குடைந்து கொண்டே இருந்தன.
அம்மாக்கு எதுவுமே பிடிபடவில்லை.
“ நல்லா இந்தக் குடிநீரைக் குடி. எல்லாம் பறந்துபோம்.” என்று குடிநீர் காய்ச்சித் தந்தா.
“ ஊரெல்லாம் வருத்தமாக் கிடக்கு. வெளியிலகிளியில திரியாதை.”
நான் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். தொண்டைக்குள்ளால் எதுவுமே இறங்கவில்லை. எத்தனயோ வழிகளில் தற்கொலைக்கான முயற்சியை எண்ணிப் பார்ப்பேன். அந்தக் கேவலமான காட்சி எல்லா வீடுகளிலும் படமாக ஓடுவதாக ஒரு பிரமை வரும். அம்மா, அப்பா, அண்ணா, தம்பி எல்லோரும் இறந்து கிடப்பது போலவும், வருவோர் போவோரெல்லாம் இந்த வீட்டைச் சுட்டிக் காட்டி ‘நடத்தை கெட்டவளின் வீடு’ என்று சொல்லுவது போலவும், நீலப்படமாக என்னுடைய அவலம் ஓடுவதைப் போலவும் தோன்றும்.
“ஐயோ ……!!!! சந்ததி சந்ததியாக இந்தப் பெயர் தொடருமே…..!!”
நாட்கள் யுகங்களாக நகர, உடலின் காயங்கள் காய்ந்து போயின. மனது மட்டும் இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது. தம்பியைக் கூட நான் நேருக்கு நேர் பார்ப்பதில்லை. மனிதத்தின் மீது இருந்த நம்பிக்கை செத்துவிட்டது. ஒருநாள்…..தெருவில் மோட்டார் சைக்கிள் சத்தம். இதயம் படபடவென்று அடிக்க ஒளிந்திருந்து யன்னலால் பார்த்தேன். அவர்கள்தான். வீட்டையே நோட்டம் விட்டவாறு இரண்டு மூன்று தடவைகள் அப்படியும் இப்படியும் போனார்கள். ‘கேற்’ அருகில் நின்ற அம்மாவிடம் நலம்கூட விசாரித்தான் ஒருவன்.
ஏதோ நடக்கப் போவதாக உள்ளுணர்வு சொன்னது. அதற்கேற்றாற்போல ‘போன்’ சிணுங்கியது.
“ நாங்கள் சொன்னது போலவே நடந்திருக்கிறாய். பிரச்சனையின் தாக்கம் உனக்கு விளங்கியிருக்கும்… இப்ப… அடுத்த சுற்று போவமா? பழைய இடத்துக்கே வா. …”
பூமி பிளந்து என்னை விழுங்கி விடாதா? ஐயோ…!!! என்ன செய்யப் போகிறேன்? இனி செய்வதற்கு எதுவுமில்லை. இது முடிவில்லாத ஒரு தொடர்கதையாகப் போகிறது. இனியும் தாங்கிக் கொள்ளும் நிலையில் நான் இல்லை. இறப்பிலாவது தீர்வு கிடைக்குமா? துப்பட்டாவினால் சுருக்குப் போட்டு இறப்பதுதான் ஒரே வழி என்று முடிவெடுத்தேன்.
“ மன்னியுங்கோ அம்மா! உங்களை கஸ்ரத்துக்கை விட்டிட்டுப் போறன்….”
மனம் அப்படியும் இப்படியுமாக அலைந்தது. பொறு!!! நான் ஏன் சாக வேணும்? இவங்கள் எத்தனை பேரைச் சிதைத்திருப்பார்கள்? இன்னும் சீரழிக்கப் போகிறார்கள்? இவர்கள் சந்தோசமாக வாழ, எந்தத் தவறும் செய்யாத நாங்கள் அவமானப்பட்டு இறக்க வேண்டுமா? கடவுள் வந்து எவருக்கும் தண்டனை கொடுக்கப் போவதில்லை. இங்கு நாங்கள்தான் கடவுள். நீண்ட யோசனையின் பின், நான் என்னுடைய தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டேன். ஆதாரங்களுடன் கிளம்பியபோது… ……. கலங்கியிருந்த மனது தெளிந்திருந்தது.