
என்னை தூக்கிலிட விரும்பும் கர்தினால்
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே பல கைதுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தாம் குற்றவாளியாக இலக்கு வைக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் விரும்புகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தாலும், தாக்குதல்களின் குற்றவாளியாக தாம் குறிவைக்கப்படுவது நியாயமற்றது என்று முன்னாள் ஜனாதிபதி சிறிசேன தெரிவித்தார்.
2019 மே 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் இடம்பெற்று வருகின்ற போதிலும், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், தாக்குதல்கள் தொடர்பாக தன்னை ‘சிறையில் அடைக்க அல்லது தூக்கிலிட’ விரும்புவதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
தாக்குதல்கள் தொடர்பாக என்னை சிறைக்கு அனுப்ப வேண்டும் அல்லது தூக்கிலிட வேண்டும் என்ற அவசர தேவை கர்தினாலுக்கு உள்ளது.
ஆனால் உரிய விசாரணைகள் முடிவடையாமல் அவர் இதைச் செய்ய முயற்சிக்கிறார். உயிர்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபை பொறுமையை கடைப்பிடிக்க தவறியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் மூலம் இதுவரை உறுதியான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை. உலக நாடுகள் சிலவற்றில் இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் நீடித்தன.
விசாரணைகளின் போது பல முக்கிய விடயங்களிற்கு பதில் இல்லாத நிலையே காணப்படுகின்றது.இலங்கைக்கு விசாரணைக்கு உதவிய பல சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

