எங்களுடன் சேர்ந்து பயணிக்க வாருங்கள் ரணில் அழைப்பு; சஜித் மறுப்பு; அப்படி ஒன்று நடக்கும் என ஒருபோதும் நினைக்க வேண்டாம் எனவும் சஜித் தெரிவிப்பு

எங்களுடன் சேர்ந்து பயணிக்க வாருங்கள் ரணில் அழைப்பு; சஜித் மறுப்பு; அப்படி ஒன்று நடக்கும் என ஒருபோதும் நினைக்க வேண்டாம் எனவும் சஜித் தெரிவிப்பு

நான் சொன்னதை செய்வேன், அதனால் நீங்களும் எங்களுடன் சேர்ந்து பயணிக்க முன்வரவேண்டும் என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் அழைப்புவிடுத்த போது, அப்படி ஒன்று நடக்கும் என நீங்கள் ஒருபோதும் நினைக்க வேண்டாம் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியின் அழைப்பை உடனடியாகவே நிராகரித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன் கிழமை சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி அது தொடர்பான விவாதத்தில் மிகவும் வினைத்திறனுடன் கருத்துக்களை தெரிவிக்கும்.அதனால் ஜனாதிபதி தற்போது தெரிவித்த விடயங்களை செயற்படுத்த வேண்டும் என்றார்.

அத்துடன் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தனக்கு விதிக்கப்பட்டிருந்த நிலையியற் கட்டளை 27இன் கீழ் 2ல் கேள்விகளை கேட்பதற்கு முற்பட்டபோது ஜனாதிபதி சபையில் இருந்து வெளியேறிச் செல்ல முற்பட்டார் ,இதன்போது எதிர்க் கட்சித் தலைவர், 27இன் கீழ் 2 ல் நான் கேட்கும் கேள்விகளையும் கேட்டுவிட்டு செல்லுங்கள் என ஜனாதிபதியை கேட்டுக்கொண்டார்.

இதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்கையில்,

எனது இராஜாங்க அமைச்சர்கள் இருவரும் சபையில் இருக்கின்றனர். உங்கள் கேள்விகளுக்கு அவர்கள் பதில் வழங்குவார்கள். அத்துடன் நான் சொல்வதை செய்வேன். அதனால் நீங்களும் எங்களுடன் சேர்ந்து பயணிக்க முன்வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளிக்கையில், தயவு செய்து அந்த ஊகங்களை நீங்கள் மேற்கொள்ள வேண்டாம். ஐக்கிய மக்கள் சக்தி உங்களுடன் சேர்ந்து நடக்கும் என ஒருபோதும் எண்ண வேண்டாம். நாங்கள் விவாதிப்போம். கலந்துரையாடுவோம் ஆனால் உங்களுடன் சேர்ந்து பயணிப்போம் என நினைக்க வேண்டாம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )