
ஆப்கானியப் பெண்களின் நிலை என்ன?
ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் வசம் வீழ்ந்ததன் பின்னர், முழு உலகமும் அங்குள்ள மக்களின் நிலை பற்றி – குறிப்பாக பெண்கள், குழந்தைகளின் நிலை பற்றி கடுமையான அச்சம் தெரிவித்து வருகின்றனர். வல்லரசு நாடுகளும் வளர்முக நாடுகளும் கூட்டாகவும் தனித்தனியாகவும் தங்களுடைய விசனத்தைத் தெரிவித்தாலும் இவையெல்லாம் எவ்வளவு தூரம் அங்குள்ள பெண்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கப் போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
யார் இந்தத் தலிபான்கள்?
பாஷ்ரோ மொழியில் ‘தலிபான்கள்’ என்றால் ‘மாணவர்கள்’ என்று அர்த்தம். அமெரிக்க – சோவியத் பனிப்போர் காலத்தில், ஆப்கானில் சோவியத் ஆதரவு இடதுசாரிக் கட்சி ஆட்சியைப் பிடிக்க, அவர்களுக்கு ஆதரவாக சோவியத் படைகள் ஆப்கானுக்குள் களமிறங்கின. பதிலுக்கு, எதிரான உணர்வுள்ள ஆப்கானியர்களை ‘முஜாகுதீன்கள்’ என்ற பெயரில் திரட்டி பயிற்சியளித்து ஆப்கானுக்குள் இறக்கியது அமெரிக்கா. ஜிகாத் – புனிதப்போர் – பயங்கரவாதம் என்ற பதங்கள் எல்லாம் அப்போதுதான் உலகில் உக்கிரமாகக் கேட்கத் தொடங்கின.
1994 இல், பாக்கிஸ்தானில் படித்துக் கொண்டிருந்த ஆப்கான் மாணவர்களை ஒன்று திரட்டி, முல்லா அலி ஓமர் என்பவர் ‘தலிபான்’ என்ற அமைப்பை உருவாக்கி களமிறக்கினார். ஆப்கானில் 10 வருடகால யுத்தத்தின் பின் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத்து, 1998ல் சோவியத் படைகள் நாடு திரும்ப, ஆப்கானில் ஆட்சி கவிழ்ந்து தலிபான்கள் காபுலைக் கைப்பற்றினர்.
அவர்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய ஷரியா சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டன. ஷரியா என்பது அனைத்து முஸ்லிம்களும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாழ்க்கை நெறி என்று சொல்லப்பட்டாலும், நாட்டுக்கு நாடு அதன் நடைமுறைத் தன்மை வேறுபடுகின்றது. கடந்த காலங்களில் தலிபான்கள் ஷரியா சட்டத்தின் மூலம் பெண்களையும் சிறுவர்களையும் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளாக்கியிருந்தனர்.
பெண்கள் முகத்திலிருந்து பாதம் வரை வெளியில் தெரியாதவாறு மூடியே உடை அணியவேண்டும்.
பெண்களுக்கான கல்வி, மருத்துவம், வேலைகள் மறுக்கப்பட்டன. ‘அபின்’ என்ற போதைவஸ்து விளைவிக்கப்படும் தோட்டங்களில் வேலை செய்வதற்கு மட்டும் அனுமதியிருந்தது.
எந்தப் பெண்ணுமே குடும்பத்திலுள்ள ஆணின் துணையில்லாமல் வீதியில் இறங்க முடியாது.
தொலைக்காட்சிகள், திரைப்படங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டு இருந்தன.
உரிமைகளுக்காக – குறிப்பாக பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பது மறுக்கப்பட்டிருந்தது.
குற்றவாளிகள் என அடையாளம் காணப்படுபவர்களுக்கு பொது வெளியில் கடுமையான தண்டனைகள் வழங்கப் பட்டன.
இவையெல்லாம் பெண்கள்மீது திணிக்கப்பட்டிருந்த சட்ட வடிவிலான அடக்குமுறைகளின் ஒரு பகுதிதான். அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்களுக்கு அளவுகோல் ஏது? அப்போது 15 வயதுச் சிறுமியாக இருந்தவரும், சிறுமியரின் கல்விக்காக குரல் கொடுத்தவருமான மலாலாவிற்கு நிகழ்ந்த கொடுமையையும், பின்னாளில் அவர் தனது போராட்டத்திற்காக நோபல் பரிசு பெற்றதையும் எவரும் மறந்துவிட முடியாது. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின் அமெரிக்கப் படைகள் ஆப்கானுக்குள் தரையிறங்க, அப்போது தலிபான்களின் ஆட்சி முடிவிற்கு வந்தது. ஆட்சிக்கு வந்தது தலிபான் எதிர்ப்புக் குழுவான வடக்குக் கூட்டணி. இந்தக் காலத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லாது போனாலும் அவர்களின் உரிமைகள் மறுக்கப்படவில்லை. ஆரம்பத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவான தொகையிலான பெண்களே ஆரம்பக் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், அது இப்போது 33 சதவீதத்தையும் தாண்டி நிற்கிறது. பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஆப்கான் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்கின்றனர். முன்பு மருத்துவர்களுக்குக் கூட வேலை மறுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அனைத்துத் தரப்பினரும் வேலைக்குச் செல்கின்றனர்.
இப்போது 20 வருடங்களின் பின் மீண்டும் தலிபான்களின் ஆட்சி. ஆட்சியமைப்பதற்கு முன்னான தலிபான்களின் செய்தி மாநாட்டின் முக்கிய தருணங்களைப் பாருங்கள். தலிபான்கள் ஷரியா அல்லது இஸ்லாமிய சட்டப்படி ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்வார்கள் என்று கூறுகிறார்கள். அமெரிக்கா மற்றும் நேச நாட்டுப் படைகளின் வெளியேற்றத்திற்கான பேச்சுவார்த்தையின் பின் தலிபான் ஆப்கானிஸ்தானின் முழுக் கட்டுப்பாட்டையும் எடுத்துள்ளது.
ஆட்சிக்கு வந்தபிறகு நடந்த முதல் செய்தியாளர் சந்திப்பில், தலிபான் செய்தித் தொடர்பாளர் ஊடகங்கள் மற்றும் பெண்களின் உரிமைகள் போன்ற பிரச்சனைகள் “இஸ்லாமிய சட்டத்தின் கட்டமைப்பிற்குள்” மதிக்கப்படும் என்று கூறினார், ஆனால் அது நடைமுறையில் என்ன அர்த்தம் என்று அவர்கள் இன்னும் எந்த விவரத்தையும் அளிக்கவில்லை.
தலிபான்கள் ஷரியாவின் கடுமையான விளக்கத்திற்கு பெயர் பெற்றவர்கள் என்பது உலகறிந்த உண்மை – தண்டனை பெற்ற கொலைகாரர்கள் மற்றும் விபச்சாரிகளிற்கு கொடுக்கப்பட்ட பொது மரணதண்டனை போன்றவை உட்பட.
ஆப்கான் மக்களும் அதீத பயத்துடனும் அவநம்பிக்கையுடனுமே இருக்கின்றார்கள். விமானத்தின் சக்கரங்களில் தொங்கி பயணம் செய்ய முற்பட்டு நடு வானிலிருந்து வீழ்ந்து இறந்த சம்பவமும், தப்பிக்கும் எத்தனிப்பில் தள்ளுமுள்ளில் இறந்த மக்கள் கூட்டமும், பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதும் செய்திகளாக வெளிவந்தவண்ணம் உள்ளன. பெண்களின் உருவப்படங்கள் உள்ள சுவர்கள் வெள்ளையடிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களை வீடு வீடாகத் தேடும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் உறுதியற்ற செய்திகள் உலவுகின்றன. என்னதான் நடக்கப் போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
-கார்த்திகை