
மொட்டு கட்சி வேட்பாளராக ரணில்
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்க கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தில் பிரதான பதவி வகிக்கும் சிரேஷ்ட அமைச்சர ஒருவர் தலைமையில் இது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதில் இரண்டு கட்சிகளின் முக்கிய எம்பிக்களும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருடத்தில் தேர்தலை நடத்தக்கூடியவாறு ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இதற்கான பிரசார நடவடிக்கைகளை சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் கீழ் முன்னெடுக்கவும் ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசாங்கத்தில் இருக்கும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துவது தொடர்பில் ஆளும் கட்சியில் சில கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது
மக்கள் வாக்குகளால் தெரிவாகாத ஜனாதிபதி ஒருவர் நான்கு வருடங்களில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி அதில் போட்டியிடுவதற்கு அரசியலமைப்பில் இடம்கிடையாது என்பதால் நான்கு வருடங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் முன்வைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்ற நம்பிக்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்ட சூழலை உருவாக்கவே இந்த திருத்தம் கொண்டுவரப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஒரு வருடத்திற்கு முன்னரே ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பை விடுப்பதற்கு அரசியலமைப்பில் இடம்கிடையாது என்பதால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை அடுத்த ஆண்டு (2024 )நவம்பர் மாதத்தின் பின்னரே நடத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது .
மக்கள் வாக்குகளால் தெரிவாகும் ஜனாதிபதிக்கே, தான் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதென்றால் ஒரு வருடத்திற்கு முன்னரே தேர்தலுக்கான அழைப்பை விடுக்க முடியும் என்றே அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.ஆனால் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு தெரிவானவர் அல்ல.
இதனால் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2024 நவம்பர் மாதத்தின் பின்னரே நடத்தப்படும் என்று அரசியலமைப்பு கூறும் நிலையில் 2024 நவம்பர் மாதம் வரை தாமதிக்காமல் உள்ளுராட்சித் தேர்தலை தொடர்ந்தும் பிற்போட்டு முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்ட சூழலை உருவாக்கவே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கும் அவர் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் விதத்தில் அதற்குத் தேவையான சட்ட சூழலை உருவாக்கவே அரசியலமைப்பில் இந்த திருத்தம் கொண்டுவரப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

