ஒரு எம்.பி.க்கு 200 கோடி ரூபா பேரம் பேசும் ரணில்’ எமது கட்சியை பிளவுபடுத்த சதித் திட்டம்; சஜித் குற்றச்சாட்டு

ஒரு எம்.பி.க்கு 200 கோடி ரூபா பேரம் பேசும் ரணில்’ எமது கட்சியை பிளவுபடுத்த சதித் திட்டம்; சஜித் குற்றச்சாட்டு

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அரசாங்கத்திற்குச் செல்வதாக போலிச் செய்திகளை உருவாக்கி நாட்டின் பிரதான எதிர் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்தும் சதித்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார். எதிர்க்கட்சியின் ஒவ்வொரு எம்.பி.க்கும் 2000 இலட்சம் வழங்கி பணத்துக்கேனும் தம் பக்கம் பெறுவதற்கு பேரம் பேசும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டினார்.

தெஹிவளையில் இடம்பெற்ற வட்டார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறுகையில்,

நாட்டை கட்டியெழுப்புவதற்கு பணமில்லாத இந்த அரசாங்கம், அரசாங்கத்தின் பக்கம் இணைத்துக்கொள்வதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து முயற்சித்தாலும்,அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பணமில்லாமல் எதிர்க்கட்சியுடன் இணைய தயாராக உள்ளனர் ,ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் பணத்திற்காக தமது சுயமரியாதையை தாரைவார்க்க மாட்டார்கள்.

2020 ஆம் ஆண்டு 6 மாத கால வயதான ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 54 ஆசனங்களை வழங்கி தேர்தல் வரலாற்றில் சாதனை படைக்க இந்நாட்டு மக்கள் உதவினார்கள் .எனவே 2000 இலட்சம் அல்லது அதற்கு மேல் கொடுத்தாலும்,ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சலுகைகளுக்காகவோ வரப்பிரசாதங்களுக்காகவோ தங்கள் சுயமரியாதையை இழக்க மாட்டார்கள் .மக்களுக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டார்கள்.

2000 இலட்சம் அல்ல 50,000 கோடியேனும் கொடுத்து முடிந்தால் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவரை தன் பக்கம் இணைத்துக்கொள்ளுங்கள் பார்ப்போம் என நான் அரசாங்கத்திற்கு சவால் விடுகின்றேன்.,இவ்வாறு மக்களுக்கு துரோகம் இழைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை.

இவ்வாறு இணைத்துக் கொள்வதற்கு பணமாக கறுப்புப் பணமும்,பண்டோரா பத்திர பணமுமே பயன்படுத்தப்படுகின்றது ,இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்த அரசாங்கம் சகல பக்கத்தாலும் மக்களை துரத்தித் துரத்தி தாக்கி வருகின்றது.,மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலமும்,வரிகளை அதிகரிப்பதன் மூலமும்,வட்டி வீதத்தை அதிகரிப்பதன் மூலமும் மக்கள் நசுக்கப்படுகின்றனர்.

இதுமட்டுமின்றி அரசியலமைப்பை மீறி தேர்தலை சீர்குலைத்து வருகின்றது. அதையும் தாண்டி,புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வந்து தொழிற்சங்க தலைவர்கள்,பல்கலைக்கழக மாணவர்களையும் சாதாரண மக்களையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்த முயற்சிக்கின்றனர் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )