
துப்பாக்கி முனையில் மிரட்டி புத்தர் சிலை வைக்க முயற்சி
புல்மோட்டையில் பிக்குகளுடன் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவு இணைந்து அட்டகாசம்
திருகோணமலை – புல்மோட்டை, பொன்மலைக்குடாவில் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் ஆயுத முனையில் மக்களை அச்சுறுத்தி பிக்குகளுடன் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து சட்டவிரோதமாக புத்தர் சிலையை நிறுவ எடுத்த முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புத்தர் சிலையை நிறுவுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் மற்றும் முஸ்லிம் போராட்டக்காரர்களை சுட்டுக் கொல்லப் போவதாக இலங்கையின் அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் அச்சுறுத்தியுள்ளார்.
எனினும் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து துணிச்சலுடன் அவர்களை எதிர்த்து அங்கிருந்து விரட்டியுள்ளனர்.
பௌத்த பிக்குகள், இலங்கையின் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினர் சிலர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் சனிக்கிழமை தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையை நிறுவ முற்பட்டதை அடுத்தே அங்கு பிரச்சினை வெடித்தது.
பிக்கு ஒருவரின் சாரதி ஒருவர் இப்பகுதி விவசாயியின் காணி வேலியை தகர்த்து உள்ளே நுழைந்து நிலத்தைக் கைப்பற்றி, அங்கு புத்தர் சிலையை வைக்க முயன்றதை அடுத்து பிரதேசவாசிகள் ஆத்திரமடைந்து அங்கு திரண்டனர். துப்பாக்கி முனையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை நிறுவும் முயற்சிக்கும் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு வந்த பிக்குகள் மற்றும் கைத்துப்பாக்கியுடள் அங்கு நின்ற அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினருடன் பிரதேச மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பாதுகாப்பு அதிகாரி தனது கைத்துப்பாக்கியை எடுத்து எதிர்ப்பு தெரிவித்த மக்களை சுட்டுக்கொல்வதாக மிரட்டினார். இதனை அங்கிருந்தவர்கள் ஒளிப்பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே வடக்கு, கிழக்கு எல்லைக்கிராமங்கள் உட்பட பல பகுதிகளில் புத்தர் சிலைகளை நிறுவி, சிங்களவர்களை குடியேற்றி பௌத்தி-சிங்கள மயமாக்கல் நடவடிக்கைகள் இந்த ஆட்சியில் தீவிரம் பெற்றுள்ளன.
இதன் ஒரு அங்கமாகவே முல்லைத்தீவை ஒட்டியுள்ள எல்லைக் கிராமமான திருகோணமலை – புல்மோட்டையையும் சிங்கள-பௌத்த மயமாக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் கூறுகையில்,
ஏற்கனவே அரிசிமலை பகுதியை ஆக்கிரமித்து விகாரை மற்றும் பன்சாலை அமைத்தும் உள்ள பனாமுர கிமி தேரர் என்ற பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரே பொன்மலைக்குடாவில் உள்ள மலைப்பகுதிக்கு(குன்று) வந்து அங்கு புத்தர் சிலையை நிறுவ முயன்றார்.
எனினும் மக்கள் அதற்கு அனுமதிக்கவில்லை இதனால் அங்கு பெரும் களேபரமே ஏற்பட்டதுடன் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.இவ்வேளையில் பிக்குவுடன் உள்ள படையினர் இருவரும் துப்பாக்கியை வெடிக்கும் நிலைக்கு தயார்படுத்தி மக்களை எச்சரித்தனர்.எனினும் மக்கள் இந்த மிரட்டலுக்கு அஞ்சவில்லை இதையடுத்து அவர்கள் அங்கிருந்து பின்வாங்கினர்.
இந்தப் பிக்கு ஏற்கனவே திருகோணமலையில் – தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதியான அரிசிமலையை பௌத்தமயாக்குவதில் முன்னின்று செயற்பட்டவர். தற்போது அங்கே உள்ள விகாரையில் தங்கியுள்ள பிக்குவுக்கு அரசினால் சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பிக்குவிற்கு பாதுகாப்பாக இரண்டு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினர் ஆயுதங்களுடன் எந்நேரமும் உள்ளனர். இந்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினரே மக்களை சுட்டுக் கொல்வதாக துப்பாக்கியை காட்டி எச்சரித்தனர்.
திருகோணமலை – முல்லைத்தீவு எல்லைக் கிராமங்களை பௌத்த-சிங்களமயமாக்குவாற்கான பெருமெடுப்பிலான முயற்சிகள் தீவிரம் பெற்றுள்ளன. இதன் மூலம் வடக்கு – கிழக்கை நிரந்தரமாக பிரிக்கும் சூழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதன் ஒரு அங்கமாகவே பொன்மலைக்குடாவில் புத்தர் சிலை நிறுவும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன எனக் கூறினார்.
இதேவேளை, பொன்மலைக்குடாவில் மலைப் பகுதியில் எந்நேரமும் மீண்டும் புத்தர் சிலை நிறுவ பிக்கு தலைமையிலான குழு முயற்சிக்கலாம் என்பதால் அந்தப் பகுதியில் பிரதேச மக்கள் திரண்டு நிற்கின்றனர். இவ்வாறான முயற்சிகள் இடம்பெற்றால் அதனைக் கடுமையாக எதிர்ப்போம் என அவர்கள் உறுதியுடன் உள்ளதால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றமும் பரபரப்பும் நிலவி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

