யாழில் 402 உறுப்பினர்கள் தெரிவுக்கு 4,111 வேட்பாளர்கள் களமிறங்கினர்

யாழில் 402 உறுப்பினர்கள் தெரிவுக்கு 4,111 வேட்பாளர்கள் களமிறங்கினர்

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சித் மன்றத் தேர்தலில் யாழ்.நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 4,111 பேர் போட்டியிடுவதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவித்தார்.

யாழ்.தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு அவர் மேலும் தெரிவிக்கும் போது,

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்திலுள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இம்முறை போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் நிறைவு பெற்ற நிலையில் இந்த முறை தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 15சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

13 அரசியல் கட்சிகளின் சார்பில் 135 வேட்பு மனுக்களும் 15 சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 15 வேட்பு மனுக்களுமாக மொத்தம் 150 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு தேர்தல் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கென யாழ்.மாவட்டத்தில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 423 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் அவர்கள் வாக்களிப்பதற்காக 514 வாக்களிப்பு நிலையங்கள் யாழ். மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இம்முறை உள்ளுராட்சி மன்றச் சட்டத்திற்கிணங்க தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் வட்டாரங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வட்டாரங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. அந்த வகையில் யாழ்.மாவட்டத்தில் 243 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

எனவே 243 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு வட்டாரத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பின்னர் மாவட்ட ரீதியாக முடிவுகள் அறிவிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மொத்தமாகவுள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும் வட்டார அடிப்படையில் 243 உறுப்பினர்களும் கட்சிகள் பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் அடிப்படையில் தெரிந்து அனுப்பப்பட வேண்டிய 159 வேட்பாளர்களுமாக மொத்தம் 402 உறுப்பினர்கள் 17 சபைகளுக்கும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 402 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டியள்ள நிலையில் மொத்தமாக 4,111 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.13 அரசியல் கட்சிகள் சார்பில் 3,686 வேட்பாளர்களும் 15 சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 425 வேட்பாளர்களுமாக மொத்தம் 4,111 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

இதனடிப்படையில் யாழ்.மாவட்டத்திலுள்ள மொத்த வாக்காளர்கள் தொகையில் 0.85 வீதமான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )