தமிழ்க் கூட்டமைப்பை பிளவுபடுத்தியது ரணிலா?; இருக்கலாம் என்கிறார் சுமந்திரன்

தமிழ்க் கூட்டமைப்பை பிளவுபடுத்தியது ரணிலா?; இருக்கலாம் என்கிறார் சுமந்திரன்

இப்போது நடக்கும் சில சம்பவங்களை பார்க்கும்போது ரணில் விக்கிரமசிங்க தனது பிரித்தாளும் தந்திரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளும் அரங்கேற்றி இருக்கலாம் எனத் தோன்றுவதாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வடமராட்சியில் உள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரித்தாளும் தந்திரத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்ததாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனரே. இது உண்மையா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சுமந்திரன், இது உண்மையா? இல்லையா? என்பதை அறிவது சற்று கடினமாக உள்ளது. இதை சில நாட்களிலேயே அறிந்து வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என நினைக்கின்றேன்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியை தெரிவு செய்கின்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக நாங்கள் வாக்களிப்பில் இருந்து விலக தீர்மானத்தை எடுத்தோம். அது ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவு. ஆனால் எங்களது 10 உறுப்பினர்களில் சிலர் தனக்கு வாக்களித்ததாக ஜனாதிபதியே ஓரிரு தடவைகள் எமக்கு சொல்லியிருக்கிறார். ஆகவே அது உண்மையாக இருந்தால் அவர் தனது பிரித்தாளுகின்ற தந்திரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளேயும் காட்டி இருக்கிறார் என்பது தான் உண்மையாக இருக்கும்.

இப்போது நடக்கின்ற சில சம்பவங்களை பார்க்கின்ற போதும் ரணில் விக்கிரமசிங்க இந்த பிரித்தாளுகின்ற தந்திரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் அரங்கேறி இருக்கிறதாக தென்படுகின்றது என அவர் கூறினார்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யார்? என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பர். அதற்கு நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை. இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலேயே தெரியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ரெலோ, புளொட் கட்சிகள் மேலும் மூன்று கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என அறிவிக்கிறார்கள்.

கடைசியாகக் கொழும்பில் இரா. சம்பந்தன் இல்லத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் பங்காளி கட்சி கூட்டத்தில் வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை மூன்று கட்சிகளும் தத்தம் விருப்பப்படி தனித்தனியாகவோ, தமக்குள் கூட்டாகவோ எதிர்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை ஒரு கட்சியும் பயன்படுத்தக் கூடாது என உறுதிமொழி வழங்கப்பட்டது. அதனை ரெலோ, புளொட் கட்சிகள் இப்போது மீறி உள்ளன. அதற்காக நாம் அவர்களுடன் மோதுவதோ, அவ்விடயத்தை சவாலுக்கு உள்ளாக்கவோ போவதில்லை. நன்றாக அந்தப் பெயர்களைப் பயன்படுத்தட்டும்.

இப்படித்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரையும், சின்னத்தையும் ஆனந்தசங்கரி முடக்கிய போது, அதனை அப்படியே சும்மா விட்டு விடுங்கள், சட்டச்சவாலுக்குக் கூட உட்படுத்த வேண்டாம் என உறுதியாக கூறினார் சம்பந்தன்.

சங்கரியையும் அவரது கட்சியையும் மக்கள் சும்மா விட்டு விட்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெயர் விடயத்திலும் சும்மா விட வேண்டியதுதான். தமிழ் மக்கள் பார்த்துக் கொள்வார்கள் – எனவும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )