
பேச்சு தொடருமா? பந்து அரசின் கையில்
-தீர்வு குறித்து தெளிவுபடுத்த அரசுக்கு ஒரு வார அவகாசம்
-அரசின் பதிலைத் தொடர்ந்தே பேச்சை தொடர தமிழ் தரப்பு முடிவு
அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அதிகார பரவலாக்கம் தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் அரசின் நிலைப்பாடு குறித்து ஒரு வாரத்துக்குள் தெளிவுபடுத்த வேண்டும் என நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ்த் தரப்பு அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளது.
இந்த விடயங்களில் அரசின் நடவடிக்கைகள் மற்றும் பதிலைப் பொறுத்தே பேச்சுவார்த்தையில் தொடர்ந்து பங்கேற்பதா? இல்லையா என்பதை தீர்மானிப்போம் என தமிழ் தரப்பால் அரசுக்கு தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாக இப்பேச்சு பங்கேற்ற ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அரச தரப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ,நீதி அமைச்சர் விஜேதாசா, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்த் தரப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரம் இச்சந்திப்பு இடம்பெற்றது.
அரசுடன் இதுவரை பேசியதற்கு இணக்க காணி விடுவிப்பு, காணி அபகரிப்பு நிறுத்தம், அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விவகாரங்களில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை.
அத்துடன், ஏற்கனவே அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட காணி, பொலிஸ் உள்ளிட்ட அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பிலும் அரசிடம் உறுதியான நிலைப்பாட்டைக் காண முடியவில்லை.
இந்நிலையில் இந்தப் பேச்சுக்கள் பயனின்றி, காலத்தைக் கடத்தும் முயற்சியாக அமைவதை நாங்கள் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. எனவேதான் இந்த விவிகாரங்கள் தொடர்பில் அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளோம். அரசின் பதிலைத் தொடர்ந்தே தொடர்ந்து பேசுவதா? இல்லையா? என தீர்மானிப்போம்.
அரசிடம் இருந்து சாதகமாக நடவடிக்கைகள் வெளிப்பட்டால் தொடர்ந்து இறுதி அரசியல் தீர்வு குறித்துப் பேசுவோம் எ னவும் ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கூறினார்

