
அரசு – தமிழ்த் தரப்பு பேச்சுவார்த்தை; மத்தியஸ்தம் செய்ய இந்தியா தயார்
அரசு – தமிழ்த் தரப்பு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை கோரி நிக்கின்றோம். குறிப்பாக எமது அயல் நாடான இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என கோரி நிக்கின்றோம். அதற்கு இந்தியா தயாராகி வருகின்றது என ஐனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய அரசியல் ரீதியான பயணத்தில் இந்தியாவோடும் ஊடாட்டங்களை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அண்மையில் இந்தியா விஜயம் செய்து ஜனநாயக போராளிகள் கட்சி சார்பில் பல முக்கிய இந்திய அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினோம். அதன் அடிப்படையில் அரசு – தமிழ்த் தரப்பு பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிக்க இந்தியா தயாராக உள்ள சமிக்ஞைகளை எங்களால் அவதானிக்க முடிந்தது.
அத்துடன், பேச்சில் இந்தியாவின் மத்தியஸ்தம் குறித்த கோரிக்கைகள் அண்மைக் காலங்களில் வலுவடைந்து வரும் நிலையில் இந்தியா அதனை மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது என நாங்கள் நம்புகிறோம் எனவும் கதிர் கூறினார்.
தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்தாவது,
2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தமிழ்மக்களுக்கான உரிமை தொடர்பில் உலநாடுகளில் பல இடங்களில் பேச்சுக்கள் இடம்பெற்றன. அந்த பேச்சுக்களில் மத்தியஸ்தராக நோர்வே சிறப்பு தூதுவராக எரிக்சொல்ஹெம் பணியாற்றி இருந்தார். 5 ஆண்டுகளாக பேச்சுக்கள் தொடரப்பட்டு எந்த முடிவும்இன்றி பேச்சு வார்தை இடைநிறுத்தப்பட்டது.
ஒஸ்லோ தீர்மானத்தின் அடிப்படையில் எமது மக்களின் உரிமைகளை ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தினால் அப்பேச்சுக்கள் தோல்வியடைந்தன.
எரிக் சொல்ஹெய்ம் ஒரு தலைப்பட்சமாக இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்தார். எமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டபோது பேச்சுக்கள் இடைநிறுத்தப்பட்டன.
அதன் பின்னர் போர்மேகங்கள் சூழ்ந்தபோதும் எமது மக்கள் அழிக்கப்பட்டபோதும் எரிக்சொல்ஹெய்ம் போன்றோர் மௌனமாக இருந்தார்கள். ஆயுதப்போராட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் அனைத்திலும் படுதேல்வியினை சந்திக்கவேண்டிய நிலைக்கு எரிக் சொல்ஹெய்ம் காரணமாக இருந்தார்.
இவ்வாறான ஒருவரை நாங்கள் பேச்சில் மத்தியஸ்தராக ஏற்க முடியாது. அவர் தன்னுடைய நோர்வேயில் மக்கள் பிரதிநிதியாகவோ அரச பிரதிநிதியாகக் கூட தற்போது இல்லை.
இன்று இலங்கை அரசாங்கம் எம்மை பேச்சுக்கு அழைக்கின்றது. அந்த பேச்சுக்கு தயாராகி வருகின்றோம். நாங்கள் மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தை கோரி நிக்கின்றோம். எமது அயல் நாடான இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என கோரி நிக்கின்றோம். அதற்கு இந்தியா தயாராகி வருகின்றது.
இந்த சூழ்நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து இந்த பேச்சுக்கு மத்தியஸ்தம் தேவையில்லை நேரடியா தமிழர் தரப்பு இலங்கை அரசுடன் பேசலாம் என்ற அடிப்படையில் எரிக்சொல்ஹெய்ம் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதனை நாங்கள் எங்கள் கட்சி, எங்கள் மக்கள்,விடுதலைப்புலிகள் போராளிகள் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம். இதனை எதிர்க்கின்றோம் என்றார்.
அத்துடன், தமிழீழ விடுதலைப்புலிகள் மீள் உருவாக்கம் குறித்து வெளிவரும் செய்திகள் குறித்துக் கருத்து வெளியிட்ட ஐனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர், தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு அரசியல் இயக்கமாக மீள் உருவாக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவாக ஜனநாயக போராளிகள் கட்சி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. அவர்களுக்கான அங்கிகாரங்கள் இருக்கின்றது. அரசியல் இயக்கமாக செயற்படுகின்றது. எந்த காலத்திலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதரீதியிலான மீள் உருவாக்கத்தினை செய்யமாட்டார்கள். அற்கான அனுமதியும் எமது தலைப்பீடத்தினால் போர் நிறைவடைந்த காலப்பகுதியில் வழங்கப்படவில்லை. எமது ஆயுதப்போராட்டம் அரசியல் ரீதியிலான போராட்டமாகத்தான் வடிவம் மாற்றப்பட்டுள்ளது என்றே தலைப்பீடம் மக்களுக்கு சொல்லி இருக்கின்றது.
உலகில் உள்ள எந்த நாட்டிற்கும் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் பாதகமாக செயற்பட மாட்டார்கள். தீவிரவாத அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து புலிகள் ஆயுதங்கள் கடத்துகின்றார்கள், ஆயுதரீதியில் மீளுருவாக்கம் பெற முயல்கிறார்கள் என இலங்கை அரசாங்கமும் செய்திகளை பரப்பி வருகிறது.
இந்தியாவின் தமிழ்நாட்டிலும் சில ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை பரப்பி வருகிக்றன. விடுதலைப்புலிகள் தொடர்பில் செய்திகளை வெளியிடுபவர்கள் தெளிவான முறையில் தகவல்களை உறுதிப்படுத்தி வெளியிடவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

