தேர்தலை நடத்தினால் மீண்டும் ‘வரிசைக்கு ”செல்ல வேண்டும்

தேர்தலை நடத்தினால் மீண்டும் ‘வரிசைக்கு ”செல்ல வேண்டும்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதன் மூலம் அரசோ ஜனாதிபதியோ மாறப்போவதில்லை. அப்படியானால் ஜனாதிபதி தேர்தலுக்கோ பாராளுமன்ற தேர்தலுக்கோ செல்லவேண்டும்.இதற்கு எதிர்க்கட்சிகள் தயாராவெனக் கேள்வி எழுப்பிய ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம்,மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு தற்போது தீரத்தில் தேவையில்லை எனவும் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
வரி அதிகரிப்பதை தவிர அரசாங்கத்துக்கு வேறு வருமான வழி எதுவும் இல்லை. அதனால் கஷ்டத்துக்கு மத்தியிலும் மக்கள் குறுகிய காலத்துக்கு இதனை பொறுத்திருக்கவேண்டும்.நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண்பதற்கு குறிப்பிட்டதொரு காலத்துக்கு சில கஷ்டமான தீர்மானங்களை எடுக்கவேண்டி ஏற்படுகின்றது.
இவ்வாறு நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த, 10பில்லியன் ரூபா தேவையாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்துவதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அந்த தேர்தலுக்கான இந்தளவு செலவழிப்பதற்கு அரசிடம் பணம் இருக்குமா?. நாட்டின் தற்போதைய நிலையில் இந்தளவு பணம் ஒதுக்க முடியுமா? இருக்கும் பணத்தை தேர்தலுக்கு செலவழித்தால், தேர்தலுக்கு பின்னர் அத்தியாவசிய தேவைகளுக்கு பணம் இல்லாமல்போகும். அப்படியானால் மீண்டும் பழைய நிலை , பல மணிநேர மின் துண்டிப்பு, அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு,வரிசைகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி அதில் யார் வெற்றிபெற்றாலும் தற்போதைய அரசோ ஜனாதிபதியோ மாறப்போவதில்லை.
அப்படியாக இருந்தால் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்லவேண்டும். அல்லது பாராளுமன்ற தேர்தலுக்கு செல்லவேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதற்கும் சிலர் தயார் இல்லை. அதனால் தேர்தல் ஆணைக்குழு, தங்களின் நிலைமையில் இருந்து மாத்திரம் சிந்தித்து செயற்படாமல், அடிமட்ட மக்களின் நிலைமையும் பார்க்க வேண்டும். மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மக்களுக்கு தேர்தல் தேவையில்லை என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )