
யாழில் இருந்து ரோஹிங்கியா அகதிகள் மீரிகான தடுப்பு முகாமுக்கு மாற்றம்; நேற்று 3 பஸ்களில் அனுப்பிவைக்கப்பட்டனர்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 104 ரோஹிங்கிய அகதிகள் மூன்று பேருந்துகள் மூலம் மீரிகான தடுப்பு முகாமுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
நேற்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் 3 பேருந்துகளில் இவர்கள் இவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
மியன்மாரில் இருந்து விரட்டப்பட்டு பங்களாதேஷ் அகதி முகாமில் தங்கியிருந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்தபோதே யாழ்ப்பாணம் மருதங்கேணி அருகே நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்தனர்.
இவ்வாறு தத்தளித்தவர்கள் கடந்த 17ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மீ்ட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.
சட்டத்துக்கு புறம்பாக இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 104 பேர் மற்றும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக நாடு கடத்த முற்பட்ட வலையமைப்புக்கு உதவியவருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.
கடந்த 19ஆம் திகதி மாலை 105 பேரும் தடுத்து வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன்,104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்டதுடன், அகதிகள் அனைவரையும் மீரிகான தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டார். அத்துடன், நாடொன்றுக்கு 104 பேரையும் கடத்த முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட படகோட்டியை 2023 ஜனவரி 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையிலேயே 19ஆம் திகதி இரவு 8 மணியளவில் இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட்டு, நேற்று மீரிகானவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

