
உடல் உறுப்புக்களை விற்கும் நிலையில் மக்கள்
நாட்டின் பொருளாதார நெருக்கடிகளால் தங்களிடம் பணம் இல்லாததால்,உடல் உறுப்புகளை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில் மின்கட்டணத்தை அரசு மீண்டும் அதிகரித்தால் வீதிக்கு இறங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ரம்புக்கன தேர்தல் தொகுதிக் கூட்டம் ரம்புக்கன தேர்தல் தொகுதி அமைப்பாளர் அஜித் செனவிரத்ன ஏற்பாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம் பெற்ற போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு எச்சரித்த அவர் மேலும் பேசுகையில்,
நாட்டை சீரழித்த,வங்கு ரோத்தாக்கிய மொட்டுத் தரப்பினர் திருட்டு யானையுடன் இணைந்து நாட்டை மீட்டெடுக்கப்போவதாக கூறுகின்றனர் ,இதன் ஊடாக அவர்கள் மீண்டும் எழ முயற்சிகின்றனர்.இது பெரும் நகைச்சுவை.
தமது பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளுக்காக பெற்றோர் தமது முழுமாத சம்பளத்தையும் செலவழிக்க நேரிட்டுள்ளது.மருத்துவ தேவைகளுக்காக கூடிய தொகை செலவாகின்றது.நாட்டின் பொருளாதார நெருக்கடிகளால் தங்களிடம் பணம் இல்லாததால்,உடல் உறுப்புகளை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் வீதிக்கு இறங்குவோம்.மின்கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படும் பட்சத்தில் பேரணியூடாக கொழும்புக்கு வந்து பேராட வேண்டி வரும்.
மக்கள் சிரமங்களை எதிர்நோக்கும் போது ஜனாதிபதி நாட்டை விற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். எமது தாய்நாட்டை விற்பனை நிலையமாக மொட்டு மாற்றியுள்ளது என்றார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியின் மேலதிக செயலாளரும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பிரத்தியேக பணியாளர் குழாமின் பிரதானியுமாக செயல்பட்ட விஜயகோன் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

