
கொலையின் பின்னணியில் ஷாப்டருக்கு நெருக்கமானவர்!; மனைவியிடம் 4மணி நேர விசாரணை; கொலையாளியை நெருங்கும் பொலிஸார்
ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பில் பல்வேறு பொலிஸ் குழுக்கள் மிகத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகையில் இக் கொலையில் அவரது நெருங்கிய சகா ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொலை விசாரணையில் இதுவரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் மூலம் இது தெரியவந்துள்ளது.
தினேஷ் ஷாப்டர் திடீரென பொரளை செல்வதாக கூறி கொழும்பு 7 மலர் வீதியிலுள்ள தனது வீட்டில் இருந்து வெளியேறியதும் அவரது கார் நேரடியாக பொரளை பொது மயானத்திற்கு வந்தமையும் அவரது தொலைபேசியில் உள்ள விபரங்களை ஆராய்ந்ததன் மூலம் தெரியவந்த தகவல்கள் இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இடைநடுவே அவர் ஒரு இடத்தில் மாத்திரம் வாகனத்தை நிறுத்தியுள்ளார் என்றும் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரின் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.இதன்படி அவரது வீட்டுக்கும் பொரளை பொது மயானத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் சிற்றுண்டி உண்பதற்காக அவர் வாகனத்தை செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான பலரை புலனாய்வாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஷாப்டரின் கார் பொரளை பொது மயானத்திற்குள் நுழைந்ததற்கான ஆதாரங்கள் மற்றும் அது நிறுத்தப்பட்டிருந்த விதம், காரை ஓட்டிச் சென்றவருக்கு, கனத்தை மயானத்துக்குள் உள்ள வீதிகள் பற்றிய நல்ல புரிதல் இருந்ததைக் காட்டுகிறது என்றும் அந்த அதிகாரி கூறினார்.
அத்தகைய புரிதல் இருக்க, காரை ஓட்டுபவர் பல சந்தர்ப்பங்களில் கனத்தை மயானத்துக்குள் சென்றிருக்க வேண்டும் என்றும், தினேஷ் ஷாப்டர் தனது காரை வீட்டிலிருந்து மயானத்திற்கு செலுத்தி வந்திருந்தால், அவர் தனது வாகனத்தில் இங்கு வருவது இது முதல் முறை அல்ல என்றும் பொலிஸ் அதிகாரி கூறினார்.
மேலும், ஷாப்டர் கொலை செய்யப்பட்ட நாளில் அவரது வாகனத்தை சந்தேகத்திற்கிடமான வகையில் வாகனம் ஒன்று பின்தொடர்வதை சி.ஐ.டி. புலனாய்வாளர்கள் அவதானித்துள்ளனர்.இது தொடர்பிலும் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
“தினேஷ் ஷாப்டர் போன்ற உயர்மட்ட தொழிலதிபர் ஒருவர்.யாராவது ஒருவரைச் சந்திப்பதற்காக மயானத்திற்குச் செல்வது அசாதாரணமான நிகழ்வு என்பதுடன்,அவர் வீட்டில் இருந்து தனியாக வந்துள்ளார். அவர் ஒரு சாரதியுடன் வந்திருக்க முடியும் . ஆனால் மிகவும் தனிப்பட்ட விஷயம் என்பதற்காகவே அவர் தனியாக வந்துள்ளதாகத் தெரிகிறது.
அத்துடன் அவர், தான் நம்பும் ஒருவரைச் சந்திக்க இவ்வாறு வந்திருக்கலாம். இல்லையேல் யாரோ அவரை ஏமாற்றி இங்கு வரச் செய்திருக்கலாம்.
இந்தக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகின்றது. ஷாப்டர் இங்கு வரும்போது எவரும் அவரது காரில் ஏறவில்லை என்றால், மயானத்தில் அவரைச் சந்திக்க யாரவது காத்திருந்திருக்கலாம். அந்த நபர் பெரும்பாலும் கொலையாளியாக இருக்க வாய்ப்புள்ளது” என்று அந்த அதிகாரி கூறினார்.
ஷாப்டரை மயானத்திற்கு வரவழைத்தவர் அவரை கொல்லும் நோக்கில் அங்கு அவரை வரவழைத்திருக்கலாம் என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கொலையானது திடீர் கோபத்தினாலோ அல்லது தற்செயலாக நடந்த சம்பவத்தினாலோ நடந்ததல்ல என்றும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
“ஷாப்டர்,அவரது காரின் சாரதி இருக்கையில் இருந்தபோது இந்தக் குற்றம் நடந்துள்ளது. அவர் கண்டுபிடிக்கப்பட்டபோது அவர் சாரதி இருக்கையில் இருந்துள்ளார்.
அவரது வணிக பங்குதாரரும் மயான ஊழியரும் கொடுத்த அறிக்கைகளில் இருந்து இது தெளிவாகிறது. அதன்படி, ஷாப்டர் காரை செலுத்திச் சென்றது மேலும் தெளிவாகிறது.
ஷாப்டர் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவரது கைகள் கட்டப்பட்டிருந்தன. அவரது கைகள், கல்லறைகளைச் சுற்றிக் காணப்படும் கயிறுகள் போன்றவற்றால் அல்ல, மாறாக பிளாஸ்டிக் கேபிள்களால் கட்டப்பட்டிருந்தன. கயிறுகளால் கட்டுவதை விட கேபிள் இணைப்புகள் வேகமாகவும் எளிதாகவும் இருக்கும். தவிர, ஷாப்டர் வயரினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அப் பகுதியில் கிடந்த வயரை எடுத்தது அவர் கழுத்து நெரிக்கப்பட்டது போல் தெரியவில்லை. இது புதிது.
அவர் சாரதி இருக்கையில் கழுத்தில் கம்பியால் கட்டப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். கேபிள் இணைப்புகள் மற்றும் வயர்கள் பொதுவாக கல்லறை பகுதிகளில் காணப்படுவதில்லை. அதன்படி, ஷாப்டர் கொல்லப்படுவதற்காக மயானத்திற்கு வரவழைக்கப்பட்டதாக தெரிகிறது,” என்றும் அந்த அதிகாரி கூறினார்.
இதேவேளை குற்றப் புலனாய்வுத் திணைக்களப் புலனாய்வாளர்கள் இந்தப் படு கொலை விசாரணையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், கொலையின் பின்னணியில் உள்ள உண்மைகள் விரைவில் வெளியாகும் என நம்புவதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலைச் சம்பவம் தொடர்பில் தினேஷ் ஷாப்டரின் மனைவியிடமிருந்து சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொலைச் சம்பவம் தொடர்பான முக்கியத் தகவல்களைக் கண்டறிய நேற்று முன்தினம் எட்டு சி.சி.ரி.வி.கமெராக்கள் சோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை 50 சி.சி.டி.வி கமெராக்களின் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
மேலும் அவரது கார் மயானத்துக்குள் நுழைந்தபோது ஷாப்டர் தனியாக இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

