உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை தப்ப வைக்கத் திட்டமா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை தப்ப வைக்கத் திட்டமா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்பதை நிறுத்தி, சஹரானுடன் இது தொடர்பான விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கப்படுகின்றது என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் தற்போதைய ஜனாதிபதி தகவல்களை அறிந்தவராக இருப்பார் என்றும், இதனால் இது தொடர்பான விசாரணைகளை மூடி மறைக்க இடமளிக்க கூடாது என்றும் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பல்ததுறை அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதன்போது முஜுபுர் ரஹ்மான் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான சாட்சியாளர்களாக சிலர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதில் முதலாவது சாட்சியாளராக பேராசிரியர் ரொஹான் குணவரட்ன என்பவரும், இரண்டாவது சாட்சியாளராக நிலந்த ஜயவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நிலந்த ஜயவர்தன தகவல்களை அழித்தாக ஜனாதிபதி ஆணைக்குழு குற்றவாளியாக குறிப்பிட்டுள்ள நிலையில் சட்டமா அதிபர் திணைக்களம் சாட்சியாளராக குறிப்பிட்டுள்ளது. ஏன் இவரை சாட்சியாளராக்க வேண்டும்.

இதேவேளை ரொஹான் குணவர்தன என்பவர் யார்? அவருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி என்ன தெரியும். கோத்தாபய ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வந்த போது அவரை பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமித்து இப்போது சாட்சியாளராக குறிப்பிட்டுள்ளளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவற்றை மூடி மறைப்பதற்காகவே இவர் சாட்சியாளராக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் அடிப்படைவாத செயற்பாடு என்றும் சஹரான் செய்தார் என்றும் அனைவருக்கும் தெரியும். ஆனால் சஹரானுக்கு இதனை செய்ய அரசியல் ரீதியில் வழியமைத்து கொடுத்த, அவரை வழிநடத்திய, அவருக்கு உதவிய, தொழில் நுட்ப உதவி மற்றும் வெடிகுண்டுக்கான மூலப்பொருட்களை கொடுத்து உதவிய அனைவரையும் கண்டுபிடிக்க வேண்டும். அதற்காகதான் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்குமாறு கூறுகின்றோம். அதனை செய்யாது சஹரானுடன் இந்த விசாரணையை முடிக்க முயற்சிக்கப்படுகின்றது.

இவர்களை விடவும் சாட்சியாளர்கள் இருக்கின்றனர். ஷானி அபேசேகர, ரவி செனவி ரட்ண ஆகியோரே சம்பவம் தொடர்பில் தகவல்களை அறந்தவர்கள். அவர்களை சாட்சியாளராக்கவில்லை. இது ஏன்? 23,000 குற்றச்சாட்டுகள் உள்ளன. சாராவின் விசாரணையை முடிக்க முயற்சிக்கப்பட்டது. சிறிய சஹரானின் விசாரணையை முடிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை ஹரீன் பெர்ணான்டோ கூறிய ‘சொனிக் சொனிக்’ தொடர்பான விசாரணையும் முடிவடையவில்லை. 2019 ஏப்ரல் 4 ஆம் திகதி களனிகம பகுதியில் நிறுத்தப்பட்ட லொறியொன்றை விடுவிக்க பொலிஸ் அதிகாரியொருவர் நடவடிக்கை எடுத்தமை தொடர்பான சாட்சியத்தையும் இல்லாது செய்துள்ளனர். அந்த லொறியில் வெடி பொருட்கள் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

தற்போது சஹரானின் மனைவி மட்டுமே இருக்கும் சாட்சியாக இருக்கின்றது. அவரின் வாயால் உண்மை வெளியில் வரும் என்று அவருக்கு கொவிட் காரணத்தை காட்டி சாட்சியத்தை நிறைவு செய்தனர். இவரை சாட்சியாளராக ஏன் குறிப்பிடவில்லை?

தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருந்த காலத்திலேயே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. அந்த அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதனால் இதில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இதனை அப்படியே விட முடியாது. இதில் உண்மையான சாட்சியாளர்களை கொண்டு வாராது சஹரானின் குழுவினர் மீது சுமத்தி இதனை முடிக்க முயற்சிக்கின்றனர். ஜனாதிபதியின் மனசாட்சிக்கு அமைய இதற்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பது தெரியும். இதனால் இதனை மூடி மறைக்க இடமளிக்காது ஸ்கொட்லாந்து பிரிவை கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )