சீனாவைப் போல் இலங்கையை உருவாக்கவா முயற்சிக்கின்றனர்

சீனாவைப் போல் இலங்கையை உருவாக்கவா முயற்சிக்கின்றனர்

சீனா இலங்கையின் உண்மையான நட்பு நாடு இல்லை என்பதுடன், சீனாவின் முதலீடுகள் இலங்கையின் பொருளாதாரத்தில் எந்த வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சாணக்கியன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பெருந்தோட்ட அமைச்சுக்கு 10.7 பில்லியன் ரூபாவே வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக இந்த நிதியை பயன்படுத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இந்த மக்களுக்காக நாங்கள் அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும்.

வர்தகத்துறை அமைச்சுக்கு 5.6 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கு கிழக்கில் ஏதாவது வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் வளங்களை சூறையாடும் செயற்பாடுகளிலேயே உங்களின் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஈடுபடுகின்றனர். இலுமனைட்டை எடுத்து தமக்கு வருமானம் ஈட்டவே முயற்சிக்கின்றனர். இதனை விடுத்து அதனை முறையாக ஏதாவது வேலைவாய்ப்புக்காக பயன்படுத்த வேண்டும். அத்துடன் கைத்தொழில் அமைச்சின் ஊடாக தொழில் வாய்ப்புகளை உருவாக்குமாறு கோருகின்றோம்.

இதேவேளை சீனாவினால் முதலீடுகள் செய்வதாக கூறுகின்றனர். அதனால் எமது நாட்டுக்கு எந்தவித நன்மைகளும் கிடைப்பதில்லை. அந்த முதலீடுகளால் இங்கே தொழில்வாய்ப்புகளும் உருவாகவில்லை. அவர்களின் முதலீடுகள் இலங்கையின் வருமானத்தை உயர்த்தப் போவதில்லை. அது பிரயோனமற்றதே.

உண்மையில் சீனா இலங்கையின் நண்பன் என்றால் இலங்கையின’ கடன் மறுசீரமைப்புக்கு உதவுமாறு கூறுங்கள். மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பதால் சீனா இலங்கையின் ஆதரவாளர் என்று அர்த்தப்படாது. சீனாவில் ஜனநாயகம், மனித உரிமைகள் இல்லை. அங்கு மதச் சுதந்திரம் இல்லை. அதேபோன்ற நாட்டை இலங்கையில் உருவாக்கவா முயற்சிக்கின்றனர். சீனா இலங்கையின் உண்மையான நட்பு நாடு அல்ல. அது மகிந்த ராஜபக்‌ஷவின் நண்பர் மட்டுமே என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )