
60 வீதமான இலங்கையர் புலம்பெயர விருப்பம்; புதிய ஆய்வில் தகவல்
60 வீதமான இலங்கையர்கள் தமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் வேறு நாட்டிற்கு இடம்பெயருவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர் .
இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்த நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர் .
இவர்களில், பெரும்பான்மையான இலங்கையர்கள் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, முக்கியமாக ஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்கு இடம்பெயர விரும்புகின்றனர்.
நாட்டின் கடன் தொடர்பாக, பெரும்பாலான இலங்கையர்கள் (37%) பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீனா இலங்கைக்கு உதவும் என்று நம்புகின்றனர்.
இலங்கையில் நான்கில் ஒரு பகுதியினர் (24%) இந்தியா இலங்கைக்கு உதவும் என்றும் 14% பேர் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஜப்பான் உதவும் என்று நம்புகின்றனர்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தை அரசாங்கம் அணுகுவதை பெரும்பான்மையான இலங்கையர்கள் (61%) ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள முக்கால்வாசி பேர் (75%) சர்வதேச நாணய நிதியத்தின் உதவியானது தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு உதவும் என நம்புகின்றனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதில், மத்திய வங்கியின் ஆளுநரான (57%) கலாநிதி நந்தலால் வீரசிங்க சரியானதைச் செய்வார் என்று பெரும்பான்மையான இலங்கையர்கள் நம்புகிறார்கள் என்பதை கணக்கெடுப்பு முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சராக (45%) இரண்டாவது இடத்தில் உள்ளார், அதே சமயம் பொது நிதிக் குழுவின் (COPF) தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா இலங்கையர்களின் (43%) மூன்றாவது நம்பிக்கைக்குரியவராகவும் உள்ளார்.
மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் ஆய்வுப் பிரிவான சோஷியல் இன்டிகேட்டர் (எஸ்.ஐ) நடத்திய ‘பொருளாதார சீர்திருத்தக் குறியீடு’ கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
நாடளாவிய ரீதியிலான இந்த கணக்கெடுப்பு, தற்போதைய பொருளாதாரம் மற்றும் கடந்த சில மாதங்களில் விவாதிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்த பொதுமக்களின் கருத்தை ஆராய்ந்துள்ளது.
இந்த ஆய்வானது 2022 அக்டோபர் 21 முதல் அக்டோபர் 31 வரை நடத்தப்பட்டது.

