வியட்நாம் அகதி முகாமில் தற்கொலைக்கு முயன்ற தமிழ் அகதி உயிரிழப்பு

வியட்நாம் அகதி முகாமில் தற்கொலைக்கு முயன்ற தமிழ் அகதி உயிரிழப்பு

கனடாவுக்கு செல்லும் நோக்கில் தென் சீனக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது மீட்கப்பட்டு வியட்நாமில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களில் ஒருவர் தற்கொலை செய்ய முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வியாழக்கிழமை இலங்கை அகதி ஒருவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையைச் சேர்ந்த 303 பேர் கடந்த 8ம் திகதி பிலிப்பைன்ஸு க்கும் வியட்நாமிற்கும் இடையே உள்ள கடலில் கப்பலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது அவர்களை யப்பான் மற்றும் சிங்கப்பூர் கடற்படையினர் காப்பாற்றி வியட்நாமுக்கு கொண்டு வந்த நிலையில் அவர்கள் அங்கு தற்காலிக அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப தீவிர முயற்சிகள் நடைபெறும் நிலையில் இலங்கைக்கு திருப்பிசெல்ல முடியாது எனக் கூறி , கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு இலங்கை அகதிகள் தற்கொலை செய்ய முயற்சித்திருந்த நிலையில் அவர்களை மீட்டு அந்த நாட்டிலுள்ள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே, இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் சடலம் தொடர்ந்தும் அந்த நாட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சடலத்தை மீள வழங்குவதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் பாரிய தொகையொன்றை கோரி வருவதாகவும் வியட்நாம்மிலுள்ள இலங்கை அகதியொருவர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )