பசில் தூக்கிலிடப்பட வேண்டியவர்

பசில் தூக்கிலிடப்பட வேண்டியவர்

நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான பசில் ராஜபக்ஸவுக்கு விமான நிலையத்தில் மாலையணிவித்து வரவேற்ற சம்பவம்,பொருளாதார வீழ்ச்சிக்காக தூக்கிலிடப்பட வேண்டிய பொருளாதாரப் படுகொலையாளிக்கு, அவரை தூக்கிலிட வேண்டிய அலுக்கோசு மலர் மாலையணிவித்து வணங்கிய ஒரு காட்சியாகவே இருந்தது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான கபிர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 7 ஆம் நாள் இறுதி விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த கப்ர் ஹாசிம் எம்.பி. மேலும் கூறுகையில்,

அரச வருமானத்தில் நூற்றுக்கு 130வீதம் கடன் வழங்குவதற்கும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் ஒதுக்கவேண்டி இருக்கின்றது. இந்த அந்தளவு பொருளாதாரம் வீழ்ச்சியடைய விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையின் பிரகாரம் 2004க்கு பின்னரான காலமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஸ கோத்தாபய ராஜபக்ஸ பசில் ராஜபக்ஸ பீ.பி. ஜயசுந்தர மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரை பொருளாதார கொலையாளிகளாவர்

இவ்வாறான நிலையில் ஞாயிற்றுக்கிழமை விமான நிலையத்தில் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.இலங்கையின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான பசில் ராஜபக்ஸ நாடு திரும்பியபோது அவருக்கு விமான நிலையத்தில் மாலையணிவித்து வரவேற்ற சம்பவம்,பொருளாதார வீழ்ச்சிக்காக தூக்கிலிடப்பட வேண்டிய பொருளாதாரப் படு கொலையாளிக்கு அவரை தூக்கிலிட வேண்டிய அலுக்கோசு மலர் மாலையணிவித்து வணங்கிய ஒரு காட்சியாகவே இருந்தது.

முன்னதாக 2002- 2003 ஆண்டுக் காலப்பகுதியில், ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம், அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யும் நிலைப்பாட்டை வெளியிட்டது. எனினும் மஹிந்த ராஜபக்ச, ஜே.வி.பி. மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகிய தரப்பினர் இணைந்து அதனை எதிர்த்தனர். இதனையடுத்து 2004- 2014 ஆண்டுக்காலத்தில் அரச சேவையாளர்களின் எண்ணிக்கை 3,50,000ஆல் அதிகரிக்கப்பட்டது. இதனால் அரச செலவீனம் கோடிக்கணக்கில் அதிகரித்தது.

அதேநேரம் 2014 ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 107 ஆக இருந்த அரச நிறுவனங்கள் 245ஆக அதிகரிக்கப்பட்டன. இதன் காரணமாக இலங்கைக்கு 1.2 ரில்லியன் ரூபா நஷ்டமேற்பட்டது. இந்தநிலையில் 2003ஆம் ஆண்டு அரச நிறுவனங்களை மறுசீரமைப்புக்கு உட்படுத்தியிருந்தால், இந்த நஷ்டம் ஏற்பட்டிருக்காது. எனினும் தற்போதைய நிலையில் அரசாங்கம் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகளை அவசரமாக முன்னெடுக்கிறது. இது நீரிழிவு நோயாளி ஒருவருக்கு மீண்டும் அதிக சீனி வழங்கி அவரை குணப்படுத்தமுடியாத நிலைக்கு கொண்டு வந்த பின்னர் தற்போது அந்த நோயாளியின் கை மற்றும் கால் போன்ற அவையவங்களை வெட்டியெடுக்கவேண்டிய நிலைக்கு ஒப்பானது. இதன் காரணமாகவே அரசாங்கம் அவசரமாக அதிக வரிகளை விதிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், மக்கள் தாங்கமுடியாத சுமைக்கு உள்ளாகியுள்ளனர்.

நாட்டை இயக்கும் இயந்திரம் என தெரிவிக்கும் தனியார் துறையினருக்கு எந்த நிவாரணமும் இல்லை. தனியார் துறையில் மொத்தமாக 62இலட்சம் பேர் இருக்கின்றனர். ஆனால் தனியார் துறை தொழிற்சாலைகள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மூடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக 20இலட்சம் பேர்வரை தொழிலை இழந்துள்ளனர். என்றாலும் அக்ரகாரா காப்புறுதி திட்டத்தில் தனியார் துறையினரையும் இணைத்துக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பதை வரவேற்கின்றோம்.

எனவே நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான ஆரம்பமாக நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். இதற்கு அரசாங்கமே ஆரம்பமாக முன்மாதிரியாக செயற்படவேண்டும். சமூக இணக்கப்பாட்டை ஏற்படுத்தவேண்டும். ஆனால் அதனை இந்த அரசாங்கத்தினால் செய்ய முடியாது. ஏனெனில் பொதுஜன பெரமுன அரசுக்கு மக்கள் ஆணை இல்லை. அதனால் தேர்தல் ஒன்றுக்கு செல்லாமல் மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தும் அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )