
ஓமானில் பாதிக்கப்பட்ட 240 பெண்கள் இலங்கை வருகை
ஓமானுக்கு வீட்டுப்பணி பெண்களாக சென்ற இலங்கையர் பல்வேறு துஷ்பிரயோகங்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவது தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அதிகளவான முறைப்பாடுகள் தற்காலிக மற்றும் சுற்றுலா விசாவில் வேலைக்காக சென்ற பெண்களிடம் இருந்து பெறப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆட்கடத்தல்காரர்கள் மற்றும் மோசடி செய்பவர்களால் ஏமாற்றப்பட்டு, பதிவு செய்யாமல் ஓமானுக்குச் சென்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அடக்குமுறை மற்றும் சித்திரவதைகளால் தற்போது ஓமானில் சிக்கியுள்ள சுமார் 90 பெண்கள் இலங்கைக்கு வருவதற்கு உதவி கோரி வருவதாகவும், அவர்கள் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகத்திடம் உதவி கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செலவில் அவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட சுமார் 240 பெண்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இது தொடர்பான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

