
வடக்கில் காணி அபகரிப்புக்காக கொழும்பிலிருந்து இரகசிய குழு
முல்லைத்தீவில் இடம்பெற்று வரும் காணி ஆக்கிரமிப்பு முயற்சியை எதிர்த்து மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில் கொழும்பில் இருந்து குழுவொன்று வந்து மிக இரகைசியதாக காணி அளிவீட்டு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் கோட்டாபய கடற்படை தளம் அமைந்துள்ள பகுதி மக்கள் காணிகளை காணி உரிமையாளர்களின் அனுமதியின்றி, அடாத்தாக ஆக்கிரமிக்கு முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் தொடர்சியான எதிர்ப்பை முறியடித்து இந்தச் சதி முயற்சியை முறியடித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இவ்வாறு காணி அபகரிப்பு முயற்சிக்காக நில அளவீட்டுப் பணி இடம்பெறவிருந்தது. இதற்கான கொழும்பில் இருந்து இரகசியமாக நில அளவையாளர் குழுவொன்று வந்திருந்தது. எனினும் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இந்நிலையில் கொழும்பில் இருந்து வருகை தந்த நில அளவை திணைக்கள அதிகாரிகளால் நேற்று இரகசிய முறையில் காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதனை அறிந்த காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் கோட்டாபய கடற்படை தளத்திற்கு முன்பாக கூ டி கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். எனினும் கடும் பாதுகாப்புடன் நில அளவீடு தொடர்ச்சியாக இடம்பெற்றதாக அறியமுடிகிறது.
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றினை அமைத்துள்ள கடற்படையினர் அந்த காணிகளை படை முகாமின் தேவைக்காக கடந்த சில வருடங்களாக நிரந்தரமாக சுவீகரிக்கும் பொருட்டு பலதடவைகள் நில அளவை திணைக்களத்தால் அளவீடு செய்ய எடுத்த முயற்சிகள் காணி உரிமையாளர்களான மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.
காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 450) 05 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம் 2017ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வெளியாகிய வர்த்தமானியின் பிரகாரம் கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள 271.62 ஹெக்டெயர் விஸ்தீரனமுடைய காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது என வர்த்தமானி வெளியாகியிருந்ததோடு காணி உரிமையாளர்களான மக்களை காணி ஆவணங்களோடு வருகைதந்து கடற்படை முகாமுக்கு காணியை வழங்க அளவீடுகளை செய்ய எல்லைகளை அடையாளம் காட்டுமாறு நில அளவை திணைக்களத்தால் பல தடவைகள் காணி உரிமையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டு அளவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகியிருந்தது .
இதற்க்கு காணி சுவீகரிப்பு தொடர்ச்சியான மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தமையால் அளவீட்டு பணிகள் இடம்பெறவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் இதற்க்காக சிறப்பான நில அளவையாளர் குழு ஒன்று கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு வருகைதரவுள்ளதாகவும் அறிந்த சில காணி உரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு கணியினை வழங்குவதற்கு எதிர்பினை தெரிவித்திருந்தார்கள்.
தமது பூர்வீக காணிகளை அரசாங்கம் தங்களுக்க வழங்கவேண்டும் என்றும் காணி உரிமையாளர்கள் தெரிவித்திருந்தார்கள்.
எனினும் மக்களின் கடும் எதிர்ப்பை மீறி நேற்று காலை முல்லைத்தீவு நில அளவை திணைக்களத்தில் கடற்படை வாகனம் ஒன்றில் சென்ற நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அளவீட்டு பணிகளில் ஈடுபட்டனர்.
கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்க அனுமதிக்கப்போவதில்லை என அறிக்கை விடும் அதே சம நேரத்தில் வடக்கில் மிக இரகசியமாக மக்கள் காணிகளை அபகரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

